டெல்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை.. பதற்றம்.. போலீஸ் தீவிர விசாரணை.. நடந்தது ஏன்?
டெல்லி: டெல்லி மயூர் விஹார் பகுதியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததால் ஏற்பட்ட பதற்றம் தணியாத நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில் போலீசார் உள்பட பல்வேறு தரப்பினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை
இதுதொடர்பான பதற்றம் இன்னும் தீராத நிலையில் ஜஹாங்கிர்புரியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கியது. இதனால் டெல்லியில் பரபரப்பான நிலை உள்ளது. இந்நிலையில் தான் பாஜக பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

யார் இவர்
டெல்லி மயூர் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் ஜித்து சவுத்ரி (வயது 42). பாஜக பிரமுகர். இவர் நேற்று இரவு மயூர் விஹார் 3வது பேஸ் பகுதியில் உள்ள தனது வீட்டு அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றனர். இதில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தடயங்கள் சேகரிப்பு
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜித்து சவுத்ரியின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
இந்த கொலை சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் அலட்சியம் கூடாது என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு டெல்லியில் பதற்றம்
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட ஜித்து சவுத்ரி வசித்த மயூர் விஹார் பகுதி டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ளது. இதனால் அங்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதி டெல்லியின் வடக்கு மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications