ஏர் இந்தியாவுக்கு தலைவலியை கொடுக்கும் ட்ரீம்லைனர்! இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து! பயணிகள் பீதி
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் மிக மோசமான விபத்தில் சிக்கியது. அந்த அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்கள் மீளவில்லை. இதற்கிடையே இன்று ஒரே நாளில் மொத்தம் ஆறு விமானங்களைத் தொழில்நுட்ப கோளாறு உட்படப் பல காரணங்களால் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடந்த கோர விபத்துக்குப் பிறகு, போயிங் நிறுவனத்தின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள் மீதான சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா வசம் இருக்கும் இந்த ரக விமானங்களைச் சோதனை செய்யவும் சிவில் ஏவியேஷன் துறை அறிவுறுத்தி இருந்தது.

6 விமானங்கள் ரத்து
இதற்கிடையே ஏர் இந்தியா இன்று ஒரே நாளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆறு சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களும் ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
எந்த விமானங்கள்
சிவில் ஏவியேஷன் அமைப்பின் உத்தரவைத் தொடர்ந்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று ஒரே நாளில் AI 915 (டெல்லி-துபாய்), AI 153 (டெல்லி-வியன்னா), AI 143 (டெல்லி-பாரிஸ்), AI 159 (அகமதாபாத்-லண்டன்), AI 133 (பெங்களூரு-லண்டன்) மற்றும் AI 170 (லண்டன்-அமிர்தசரஸ்) ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதோடு மட்டுமின்றி, நேற்றைய தினம் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட AI 315 ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் ஹாங்காங்கிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் திட்டமிட்டபடி இறங்கியது. ஆனால், அங்கு நடந்த சோதனையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். மேலும், லுஃப்தான்சா பிராங்போர்ட்- ஹைதராபாத் விமானம், பிரிட்டிஷ் ஏர்வேஸின் லண்டன்- சென்னை விமானங்களும் தங்கள் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்தன. இவையும் ட்ரீம்லைனர் ரக விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா சொல்வது என்ன
இதில் டெல்லி பாரீஸ் AI 143 விமானத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்து ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது. அதாவது விமானம் புறப்படுவதற்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான சோதனைகளின் போது ஒரு பிரச்சனை கண்டறியப்பட்டதாகவும் அது சரி செய்யப்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த சிக்கலைச் சரி செய்ய நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும் அதன் பிறகு விமானத்தை இயக்கினால் அது பாரிஸ் விமான நிலையத்தின் இரவு நேர ஆபரேஷன் கட்டுப்பாடுகளை மீறுவதாக இருக்கும் என்பதால் அந்த விமானத்தை ரத்து செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
வான்வழி கட்டுப்பாடுகள் கூடுதல் முன்னெச்சரிக்கை சோதனைகள் காரணமாகச் சரியான விமானம் கிடைக்காததால் அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானச் சேவை இன்று ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரம் அந்த ரூட்டில் பறக்க இருந்த ட்ரீம்லைனர் விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. ஜூன் 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விபத்திற்குப் பிறகு, ட்ரீம்லைனர் விமானங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விபத்து
அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற AI 171 விமானம் புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது. விபத்து தொடர்பான வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அந்த விமானம் போதிய உயரத்தை அடைய முடியாமல் தடுமாறியது அதில் தெளிவாகத் தெரிந்தது. சுமார் 650 அடி வரை மட்டுமே சென்ற ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு கல்லூரி விடுதியில் விழுந்தது.












Click it and Unblock the Notifications