குறையும் வேலைவாய்ப்பு.. ஜூனில் மட்டுமே 1.3 கோடி பேர் வேலையிழப்பு.. மத்திய அரசை விளாசிய பிரியங்கா
டெல்லி: இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 1.3 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அதோடு கடந்த 12 மாதத்தில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடைமுறைகள் இந்தியாவின் ஏழை, நடுத்தர மக்களை பாதித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர். இந்திய பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்புக்காக அறிமுகம் செய்யப்பட்ட அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டது. அதோடு டெல்லியில் போராட்டமும் நடத்தப்பட்டது.
அப்போது இந்தியாவில் ஏற்கனவே இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். இந்த சூழலில் இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்ற விரும்புவோரின் விருப்பத்தை சிதைக்கும் வகையில் அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு மட்டுமே பணி வழங்குவது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மேலும் 4 ஆண்டு பணிக்கு பிறகு அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினர்.
ஒரு மாதத்தில் 1.3 கோடி பேர் வேலையிழப்பு
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வேலையிழப்பு குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1.3 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த 12 மாதம் இல்லாத வகையில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது.
30 லட்சம் பணி காலி
2022ல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருந்து 12 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசில் 30 லட்சம் அரசு வேலை காலியாக உள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வெற்று பேச்சுபேசி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் ஏமாற்றி வருகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications