Income Tax Bill 2025: புதிய வருமான வரி மசோதாவை.. திடீரென வாபஸ் பெற்ற மத்திய அரசு! என்ன காரணம்?
டெல்லி: மத்திய அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்திருந்தார். வரி செலுத்தும் முறையை எளிமையானதாக மாற்றவே இந்த புதிய மசோதா கொண்டு வரப்படுவதாக அப்போது மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டது. இதற்கிடையே இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் எப்போதும் வருமான வரி தொடர்பான அறிவிப்பே அதிக முக்கியத்துவம் பெறும். மிடில் கிளாஸ் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அறிவிப்பாக வருமான வரி அறிவிப்பு இருக்கும். அதேபோல சம்பளதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியையும் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

வாபஸ் பெற்ற மத்திய அரசு
இருப்பினும், இப்போது 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டமே பின்பற்றப்படுகிறது. இதற்கு மாற்றாகக் கடந்த பிப்ரவரி 13ம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா, 2025 (Income-Tax Bill, 2025) தாக்கல் செய்யப்பட்டது. 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவே இந்த முறையைக் கொண்டு வருவதாக மத்திய அரசு அப்போது கூறியிருந்தது.
இதற்கிடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. புதிய வருமான வரி மசோதா தொடர்பாக பையந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது. அந்த பரிந்துரைகளைக் கொண்டு புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது.
புதிய மசோதா
வருமான வரி தாக்கல் செய்யும்போது பல்வேறு வடிவங்கள் தொடர்பான குழப்பங்களைத் தவிர்த்து, அனைத்து மாற்றங்களுடனும் ஒரு தெளிவான, புதுப்பிக்கப்பட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஆகஸ்ட் 11ல் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மாற்றங்கள்
தேர்வுக் குழு தனது அறிக்கையை ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 4,500 பக்கங்களுக்கும் மேல் இருக்கிறது. புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மேம்படுத்துவதற்கான 285 பரிந்துரைகள் இதில் இருந்தது. அதில் பல பரிந்துரைகள் வரி செலுத்துவோருக்குப் பயன் தருவதாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனுக்கான பலன் இப்போது ஓனரே இருக்கும் வீடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது இப்போது வாடகைக்கு விடப்பட்ட வீடுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டிடிஎஸ் & டிசிஎஸ்
அதேபோல டிடிஎஸ் (TDS - Tax Deducted at Source) மற்றும் டிசிஎஸ் (TCS - Tax Collected at Source) ரீஃபண்டுகளுக்கான நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும் குழு பரிந்துரைத்துள்ளது. பல வரி செலுத்துவோர் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ரீஃபண்டுகளைப் பெறுவதில் நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றனர். இக்குழு ரீஃபண்ட் செயல்முறையை விரைவாகவும், எளிதாகவும், வெளிப்படையாகவும் மாற்றப் பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த புதிய மாற்றங்களுடன் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications