பிபிசி டெல்லி, மும்பை அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரி ஆய்வு- தொடரும் கண்டனங்கள்!
டெல்லி, மும்பையில் பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை ஆய்வு நடத்துகின்றனர்.
டெல்லி: சர்வதேச ஊடகமான பிபிசி-ன் டெல்லி, மும்பை அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பிபிசி ஊடகத்தை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு பத்திரிகை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
2002-ம் ஆண்டு குஜராத் மத மோதல்கள் தொடர்பாக பிபிசி ஊடகமானது இரு பகுதிகளாக ஆவணப்படங்களை வெளியிட்டது. குஜராத் மத மோதலின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் மத மோதல்களில் மோடி குறித்தும் ஆவணப்படம் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது.

இதனையடுத்து நாடு முழுவதும் பிபிசியின் குஜராத் ஆவணப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள், இந்த ஆவணப்படத்தை நாடு முழுவதும் ஒளிபரப்பி வருகின்றனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிபிசியின் ஆவணப்படம், பாஜகவுக்கு எதிரான பிரசார ஆயுதமாக உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனால் பிபிசி அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. பின்னர் வருமான வரி தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வருமான வரி ஆய்வு தொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், டெல்லி-மும்பை அலுலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளன. அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் வெளியேறிவிட்டனர். அதேநேரத்தில் சில ஊழியர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.
பிபிசி அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வருமான வரித்துறை ஆய்வுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் பத்திரிகையாளர் சங்கங்கள் அனைத்தும் இந்த வருமான வரித்துறை ஆய்வை கண்டித்திருந்தன.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக டெல்லி, மும்பை பிபிசி அலுவகங்களில் வருமான வரித்துறையினரின் ஆய்வு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அலுவலகங்களில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி ஆய்வு இரவும் நீடித்தது. இன்று 2-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications