சொந்த ரெக்கார்டை முறியடித்த பிரதமர் மோடி.. சுதந்திர தின உரையில் எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா?
டெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதுவரை சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்களில் மோடி தான் அதிக நேரம் உரையாற்றினார் என்ற ரெக்கார்டு இருந்தது. இன்று அந்த ரெக்கார்டை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். மோடி தனது 11வது சுதந்திர தின உரையில் 1.30 மணி நேரம் பேசினார்.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி விட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், பிரதமராக மோடி பதவியேற்றது முதல் அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உரையாற்றி வருகிறார். கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, 3-வது முறையாக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

98 நிமிடங்கள் பேசிய மோடி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் சுதந்திரதினமான இன்று 11-வது முறையாக செங்கோட்டையில் உரையாற்றினார். பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு 96 நிமிடங்கள் சுதந்திர தினை உரை நிகழ்த்தினார். இதுவே இந்திய பிரதமர் ஒருவர் செங்கோட்டையில் நீண்ட நேரம் ஆற்றிய உரையாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி, 98 நிமிடங்கள் பேசியுள்ளார்.
குறைந்த நேர உரை: அந்த வகையில் தனது சொந்த ரெக்கார்டை பிரதமர் மோடி முறியடித்து இருக்கிறார். பிரதமர் மோடிக்கு முன்பாக, 1954 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் பேசியிருந்ததே பிரதமரின் நீண்ட நேர உரையாக இருந்தது. குறைந்த நிமிட பேச்சு என எடுத்துக்கொண்டால் 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் உரையே ஆகும். இந்திரா காந்தி அந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையை வெறும் 14 நிமிடங்களில் மட்டுமே பேசினார்.
சராசரியாக 82 நிமிடங்கள்: பிரதமர் மோடியின் குறைந்த நேர சுதந்திர தின உரை என்பது 2017ல் பேசியதே ஆகும். அவர் அப்போது 56 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் என்பது 82 நிமிடமாக உள்ளது. இந்தியாவின் வேறு எந்த பிரதமரை விடவும் இது அதிகம். பிரதமர் மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு தொடங்கி இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
வெள்ளை நிற குர்தா: ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியம், மதசார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வருவது காலத்தின் அவசியம் என பல்வேறு முக்கிய அம்சங்கள் மோடியின் இன்றைய உரையில் இடம் பெற்று இருந்தது. பிரதமர் மோடியின் உரை மட்டும் இன்றி அவர் அணிந்து வரும் தலைப்பாகையும் சுதந்திர தினத்தன்று கவனம் பெறும்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ராஜஸ்தானி லெஹேரியா அச்சு தலைப்பாகை அணிந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வெள்ளை நிற குர்தா மற்றும் புளு நிறத்திலான சட்டை அணிந்து வந்திருந்தார் மோடி. கடந்த ஆண்டு காவி நிறத்திலான தலைப்பாகையை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அணிந்திருந்தார்.


Click it and Unblock the Notifications
