வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகள்.. டாப் லிஸ்டில் இந்தியா! கவனம் அவசியம்.. வெளியான ஷாக் தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்ப அலை பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் வெப்ப அலை பாதிப்பில் உயிரிழக்கும் 20%க்கும் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர் என்கிற அதிர்ச்சி ஆய்வுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஆனால் சில நேரங்களில் முன்னதாகவே கோடை தொடங்கி விடுகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடைக்காலம் மார்ச் இறுதியில் தொடங்கிவிட்டது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், கர்நாடகாவிலும் கோடை மழை பெய்து வருவதால் வெயில் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயில் 43 டிகிரி செல்சியஸ் வரை வாட்டி வதைக்கிறது.
வெயில் காரணமாக வெப்ப அலையின் தாக்கமும் தீவிரமடைந்துள்ளது. வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்படும் வெப்ப அலை மரணங்களில் 20%க்கும் அதிகமாக இந்தியாவில் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில் இந்த விவகாரங்கள் தெரிய வந்திருக்கின்றன. உலகம் முழுவதும் வெப்பத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக தீ விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 1% வெப்ப அலையால் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
1990 முதல் 30 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தபோது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது வெப்ப அலையால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1.53 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் 5ல் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மொத்த உயிரிழப்புகளில் சீனா 14%, ரஷ்யா 8% என உயிரிழப்புகளை கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகளில் ஏறத்தாழ சரிபாதி உயிரிழப்புகள் ஆசியாவில் பதிவாகின்றன. ஐரோப்பாவில் 30% மரணங்கள் பதிவாகின்றன. வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளும், நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
1999ஆம் ஆண்டிலிருந்து, 2019ஆம் ஆண்டு வரை கணக்கெடுத்துக் கொண்டால் உலகம் முழுவதும் வெப்ப அலை வீசும் நாட்கள் சராசரியாக 13.4லிருந்து 13.7 என இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் 0.35 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் வெப்ப அலை மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications