தமிழகத்தில் "இந்தியா" தான்.. டாப்பில் திமுக.. 2ஆவது அதிமுக.. அப்போ பாஜக எங்கே? லோக்சபா தேர்தல் சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், லோக் போல் என்ற அமைப்பு தமிழ்நாடு மக்களவை தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுக்க மொத்தம் 543 இடங்கள் இருக்கும் நிலையில், குறைந்தது 272 இடங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும்.

இப்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், 2019இல் அவர்கள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டனர்.
இந்தியா கூட்டணி: அதேநேரம் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதே பாஜகவுக்கு பலம் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என பலரும் வலியுறுத்தின. அதன்படி முதலில் நிதிஷ்குமார் எடுத்த முன்னெடுப்பில் பல எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தன. பிறகு அக்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது அக்கட்சித் தலைவர்களின் நம்பிக்கை.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், லோக்சபா தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக் போல் என்ற அமைப்பு மாநிலம் வாரியாக வெளியிட்டு வருகிறது. இப்போது தென்மாநிலங்களுக்கான சர்வே வெளியிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்: கர்நாடகாவில் பாஜகவுக்கு 'தர்ம அடி' காத்திருக்கிறதாம் - கதறவிடும் Lok Poll சர்வே!
யூனியன் பிரதேசங்கள்: அதன்படி தென்னிந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 1-2 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக கூட்டணி 0-1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் லோக் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாரில் காங்கிரஸ் வென்று இருந்தது. லட்சத்தீவு லோக்சபா தொகுதியில் தேசியாத காங்கிரஸ் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு: அதேபோல தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இம்முறை இந்தியா கூட்டணியின் அலையே வீசுவதாக லோக் போல் அமைப்பு சர்வேயில் கூறப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி 34-37 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கடந்தாண்டு தான் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தது. இருப்பினும், அதிமுக 1-3 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பாஜக கூட்டணி 0-1 இடங்களிலும், மற்ற கட்சிகள் 0-1 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோக் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38இல் வென்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஓ. பி. ரவீந்தரநாத் வெற்றி பெற்றிருந்தார். இந்த சர்வேயில் 34 இடங்கள் வரை திமுகவுக்குக் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும், இது முந்தைய தேர்தலுடன் ஒப்பீட்டால் திமுகவுக்குச் சற்று சரிவு என்பது போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தென்மாநிலங்களில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாகவே பேச்சுகள் உள்ளன. அதை உறுதி செய்யும் விதமாக இந்த புது சர்வே முடிவுகளும் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications