பாஜக வைத்த புள்ளி! கோலம்போடும் ‛இந்தியா’ கூட்டணி! மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் ரூட் கிளியர்
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில்‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய கட்சிகளுக்கு இடையே மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்க உள்ளதாகவும், அதற்காக வகுத்துள்ள திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகள் இணைந்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வாய்ப்பில்லை என நினைத்த பாஜகவுக்கு இந்த கூட்டணி பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதோடு மட்டுமின்றி ‛இந்தியா' கூட்டணியின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்பது வேகமெடுத்துள்ளது. எந்த காரணத்தை கொண்டும் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக தெளிவாக ஒவ்வொரு கட்சிகளும் உள்ளன. அதோடு மட்டுமின்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் தொடர்ந்து தீவிர திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தற்போது வரை ‛இந்தியா' கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதோடு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டமும் நடந்து முடிந்தது. இதில் பிராந்தியங்கள் வாரியாக முக்கிய இடங்களில் பாஜக அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது.
மேலும் மத்திய அரசு முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால் விரைந்து தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக நடக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் அங்கு ‛இந்தியா' கூட்டணியில் உள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா (உத்தவ் அணி) ஆகியவை தற்போதும் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது.
இந்த 3 கட்சிகளும் இணைந்து தான் கடந்த 2019 மகாராஷ்டிரா தேர்தலில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து கடந்த ஆண்டு வரை இரண்டரை வருடம் ‛மகா விகாஷ் அங்கடி' என்ற பெயரில் ஆட்சி செய்தனர். அப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். அதன்பிறகு உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தனி அணியாக செயல்பட்டு பாஜகவுடன் கைகோர்த்து முதல்வர் பதவியை எட்டிப்பிடித்ததால் ‛மகா விகாஷ் அங்கடி' கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இது நடந்த பிறகு சமீபத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வராகி உள்ளார். இப்படி பாஜகவால் சரத்பவார், உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) ஆகியவை எந்த பிரச்சனையும் இன்றி தொகுதி பங்கீடு செய்து கொள்ள முடிவு செய்துள்ளன.
மேலும் 3 கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிராவில் போட்டியிடும்போது அது நிச்சயம் பாஜகவுக்கு பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தல்களே சாட்சியாகும். இதனை உணர்ந்து தான் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) கட்சிகள் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளன.
அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகளும் தலா 16 என்ற வகையில் பிரித்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடுகிறது என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுவும் 3 கட்சி தலைவர்களும் ஒண்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு விரைவில் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications