பிளான் B: மாலத்தீவில் ராணுவ வீரர்களுக்கு பதில்.. பணியாளர்கள்! மாற்று யோசனையை செயல்படுத்தும் இந்தியா
டெல்லி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ள நிலையில், ராணுவ வீரர்களுக்கு பதில் திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவு உடனான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா அங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மாலத்தீவில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றார். இவர் தேர்தல் வாக்குறுதியாக "நான் வெற்றி பெற்றால் மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

எனவே இந்திய ராணுவம் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக அதன் அதிபர் முகமது முய்ஜு கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ராணுவ வீரர்களுக்கு பதிலாக திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அதாவது, மாலத்தீவில் உள்ள 3 விமான தளங்களில் ஒன்றில் மார்ச் 10ம் தேதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள். மற்ற இரண்டு தளங்களில், மே 10ம் தேதிக்குள் வீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள்.
மாலத்தீவு மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை வழங்கும் இந்திய விமான தளங்களை தொடர்ந்து இயக்குவதற்கு அந்நாட்டின் ஒத்துழைப்பு அவசியம். எனவே ராணுவ வீரர்களுக்கு பதில், பணியாளர்களை அங்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு, அடிப்படையில் சீன ஆதரவாளராவார் என்பதால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார். சீன உளவு கப்பலை மாலத்தீவுக்குள் வர அனுமதி கொடுக்கும் அளவுக்கு அவரது இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமடைந்திருக்கிறது. அரிசி, சர்க்கரை தொடங்கி ஜவுளி பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் என அனைத்தும் இந்தியாவிலிருந்துதான் மாலத்தீவுக்கு ஏற்றுமதியாகிறது. இப்படி இருந்தும் கூட, அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவது சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications