காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! இன்று "இந்தியா"கூட்டணி ஆலோசனை- அடுத்து நடக்கும் பெரிய அரசியல் மாற்றம்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழல் உருவாகி உள்ள நிலையில், "இந்தியா" கூட்டணி எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியது முதலே பலருக்கும் ஷாக். ஏனென்றால் இவை எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர் எதிராகவே இருந்தது.

கிட்டத்தட்ட அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜக 300+ இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறிய நிலையில், பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜகவால் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
அதேநேரம் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றன. குறிப்பாகக் காங்கிரஸ் 99 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், திரிணாமுல் 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும் வென்றது.
இப்படி எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாததால் அடுத்து என்ன என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் அவர்கள் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைக்கக் காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும் வென்று கூட்டணியில் முக்கிய கட்சிகளாக உள்ளன. அவர்களை இந்தியா கூட்டணி பக்கம் கொண்டு வரவும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இன்று நடக்கும் "இந்தியா" பிளாக் ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications