வெளியுறவுத்துறை நிலைப்பாட்டில் மாற்றம்? திடீரென இந்தியா எடுத்த முடிவு! காமேனி மறைவுக்கு இரங்கல்!
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, கண்டனம் தெரிவித்து வந்திருந்த இந்தியா, தற்போது ஈரான் உச்ச தலைவர் காமேனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்ற, மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரிடம் இந்தியாவின் இரங்கலை தெரிவித்தார்.

இந்தியா-வளைகுடா உறவு
நேற்று முன்தினம் வரை, வளைகுடா நாடுகள் தாக்கப்பட்டதற்கு ஈரானின் பெயர் குறிப்பிடாமல் இந்தியா கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று இரங்கல் தெரிவித்திருப்பது, வெளியுறவுத்துறை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தியாவுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உறவு இல்லை. வெறுமென எரிபொருள் விநியோகம் மட்டுமே இருக்கிறது. ஆனால், சமீப நாட்களாக இந்த நட்பு வட்டத்தை மத்திய அரசு விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டது.
மத்திய அரசின் முயற்சி
இப்படி இருக்கையில்தான், ஈரான் போர் வெடித்தது. ஈரானிடம் இந்தியா தொடக்கத்தில் எரிபொருள் வாங்கி வந்தது. ஆனால், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்த வர்த்தகமும் சில ஆண்டுகளுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது. மறுபுறம் UAE, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடனான உறவை மத்திய அரசு அப்படியே தக்கவைத்துக்கொண்டது.
நெருக்கத்தை விரும்பும் இந்தியா
மட்டுமல்லாது இந்த உறவை மேம்படுத்தவும் முயன்றது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா வந்த கத்தார் அமீர், அதற்கு முன்னர் ஜனவரில் டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் போன்ற வளைகுடா தலைவர்களை, பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார். இந்த செயல் அரபு நாடுகளுடன் இந்தியா நெருக்கத்தை விரும்புகிறது என்கிற செய்தியை வெளிப்படுத்தியது.
ஈரான்-இந்தியா உறவு
இருப்பினும், ஈரான் விஷயத்தில் இந்தியா பெரிய அளவில் மெனக்கெடவில்லை. ஆனால், பழைய நட்பை விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை. சூழல் இப்படி இருக்கையில் திடீரென ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. காமேனியை காலி செய்தது அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். எனவே, காமேனி குறித்து பேசினால் இரு நாடுகளுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே நேரம் இரங்கல் தெரிவிக்காமலும் இருக்க முடியாது.
3 நாட்களுக்கு பிறகு இரங்கல் சொன்ன இந்தியா
எனவே, காமேனி மறைந்து 3 நாட்களுக்கு பிறகு, மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியை வைத்து இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்ற விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார். காமேனிக்கு இரங்கல் தெரிவித்தன் மூலம், தனது வெளியுறவு கொள்கையில் இந்தியா மாற்றம் செய்திருக்கிறதா, என்கிற கேள்வி எழுந்திருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications