குறைத்து மதிப்பிட்ட சீனா! திருப்பி அடிக்கும் இந்தியா! எல்லை மோதலுக்கு என்ன காரணம்! எளிய விளக்கம் இதோ
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா குறித்து சீனா இன்னுமே குறைத்து மதிப்பிடுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான ஒரு உறவு இல்லை. அதிலும் கல்வான் மோதலுக்குப் பிறகு எல்லையில் இரு நாட்டு ராணுவமும் ஆட்களைக் குவித்து எல்லைகளைப் பாதுகாத்து வந்தது.
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த 9ஆம் தேதி இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளது சீனா. சுமார் 600 பேர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படி அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

எல்லை விவகாரம்
இருப்பினும், எல்லையில் அலர்ட் மோடில் இருந்த இந்திய ராணுவம் அவர்களைச் சீன பகுதிக்கே விரட்டியடித்துள்ளனர். இதில் நல்வாய்ப்பாக இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். மோசமான காயங்கள் கூட இந்திய வீரர்கள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். கடந்த டிச.9ஆம் தேதி நடந்த இந்த மோதல் எல்லையில் வளரும் பிரச்சினைகளையும் நாம் அதைத் தவறாகக் கணக்கிடுவதையும் காட்டுவதாக முன்னாள் இந்திய அதிகாரி விஜய் கோகலே தெரிவித்தார்.

சீனா சொல்வது என்ன
எல்லையில் நடந்த சம்பவம் குறித்து சீனாவும் தனது பங்கிற்கு ஏகப்பட்ட விளக்கங்களைக் கொடுத்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரின் யாங்ட்சே பகுதியில் சீனா வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொள்ளும் போது, இந்திய ராணுவமே எல்லை தாண்டி சீன ராணுவத்தைத் தடுக்க முயன்றதாக அந்நாட்டின் மூத்த கர்னல் லாங் ஷாஹுவா தெரிவித்தார். மேலும், எல்லையில் படைகளைக் கட்டுப்படுத்தவும் எல்லையில் அமைதி காக்கவும் சீனாவுடன் இந்திய இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கர்னல் லாங் ஷாஹுவா தெரிவித்தார்.

சமாளிப்பு
அதேபோல சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பில், "சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய எல்லை சூழல் நிலையாகவே உள்ளது. இரு தரப்பும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை தொடர்பான பிரச்சினைகளைக் கையாண்டு வருகிறது" என்றார். இருப்பினும், கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது, இந்திய- சீன எல்லையில் தனது அத்துமீறல்களைச் சீனா தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தவறான கணக்கீடு?
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது எல்லையில் தற்போது இருக்கும் சூழலை மாற்றும் முயற்சியில்தான் சீனா இறங்கியுள்ளது எனத் தெரிகிறது. தற்போது எல்லையில் நடந்துள்ள அத்துமீறலும் அதன் வெளிப்பாடுதான். குறிப்பாகக் கடந்த 2020-21இல் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சீனா தனது மூலோபாய திட்டங்களைத் தவறான கணக்கிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக முன்னாள் வெளியுறவு செயலாளரும், சீனாவுக்கான தூதருமான விஜய் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் நடவடிக்கை
அவர் மேலும், "எல்லையில் ஏற்படும் சிறு சிறு மோதல்களுக்கு இந்தியா பெரியளவில் ராணுவ ரீதியாகப் பதிலடி தராது.. தொல்லை தரும் நாட்டுக்கு எதிராக இந்தியா சர்வதேச கூட்டணியை உருவாக்காது என்ற சீனா நினைப்பதாகவே தெரிகிறது. ஆனால், 2020 லடாக் மோதலுக்குப் பிறகு இந்தியாவின் மூலோபாய சிந்தனை மாறிவிட்டது. முதலில், சீனா ஒரு நட்பு நாடா அல்லது எதிரி நாடா என்பதில் இந்தியாவுக்கு இருந்த தெளிவின்மை மாற்றப்பட்டுள்ளது. சீனாவின் நடத்தை இப்போது நட்பு நாடு செய்யும் வேலையாகக் கருதப்படவில்லை. அதேநேரம் சிலர் சீனா வேண்டுமென்றே இதைச் செய்திருக்காது என்றும் கூறுகிறார்கள்.

துணிச்சல்
இரண்டாவதாக, மூலோபாயக் கட்டுப்பாடு என்பது மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் துணிச்சலான முடிவெடுக்கத் தயாராக உள்ளதால் இது மாற்றப்பட்டுள்ளது. இதனால் பாங்காங் ஏரியில் சீனாவை வடக்கு கரையில் இருந்து பின்வாங்க வைத்த ஸ்னோ லேப்பெர்ட் உள்ளிட்ட பல துணிச்சலான கவுன்டர் ஆப்ரேஷன்கள் செய்யக் காரணமாக அமைந்தது. இப்போது நடந்த மோதலை, இந்தியா இந்தளவுக்கு எடுத்துச் செல்லும் என்று சீனா துளியும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இந்தியா ரிஸ்க் எடுக்காது என்பதால் இதுபோன்ற சிறு மோதல்களை இந்தியா பெரிதுபடுத்தாது என்று இனியும் சீனா நினைக்க முடியாது.

மறுபரிசீலனை
வரும் காலத்தில் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியா பதில் பெரிதாக இருக்காது என்று சீனா நினைக்குமானால் அதை நிச்சயம் சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் இந்தியா இப்போது ராணுவ ரீதியாகப் பதில் தர அதிக விருப்பமும் உறுதியும் கொண்டுள்ளது. எல்லையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால்.. எல்லையில் இடர் மேலாண்மைக்கான அவசரத் தேவை உள்ளது. கல்வான் சம்பவம், இந்திய நம்பிக்கைக்கு மாறாக அமைந்துவிட்டது. இந்தியா அமைதியைத் தொடர விரும்பும் நிலையில், சீனா ராணுவ நடவடிக்கையால் ஆதாயம் பெற முயல்கிறது. இதனால் குறுகிய காலத்தில் அங்கு ராணுவ ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது.. எனவே இந்த பிரச்சினைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டும். இது அமைதி தேடுவதைக் காட்டிலும் வேறுபட்டது..

பேச்சுவார்த்தை ரொம்ப முக்கியம்
இடர் மேலாண்மை என்பது எல்லை விவகாரத்தை அரசியல்-மூலோபாய நிலைக்கு மாற்றுகிறது. அமைதியின்மை தொடர்பாக அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையைத் தொடங்கினால் எல்லையில் மோசமான சூழல் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். எனவே, 2019 நவம்பருக்குப் பின் நடக்காமல் இருக்கும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்.. அண்டை நாடுகளாகவும் அணு ஆயுத நாடுகளாகவும் இருக்கும் இரண்டு பெரிய ஆசிய நாடுகள் தங்களுக்குள் இருக்கும் உறவு குறித்த அரசியல் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications