"குறுகிய மனப்பான்மை!" பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அமெரிக்க எம்பி விசிட்.. கொந்தளிக்கும் இந்தியா
டெல்லி: அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ள நிலையில், இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. குறிப்பாக உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
அதேநேரம் இந்தியா இந்தப் போரில் தொடக்கம் முதலே நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களிலும் கூட இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிக்கவே செய்தது.

அமெரிக்கா
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை முதலில் அமெரிக்கா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியாக அந்நாட்டின் பிரதிநிதிகள் இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையிலேயே கருத்து தெரிவித்து வந்தனர். அதாவது அமெரிக்க அரசு சார்பில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, அந்நாட்டின் பிரதிநிதிகள் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது என்றே தொடர்ந்து கூறி வந்தனர்.

பாகிஸ்தான் பிரதமர்
இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமெரிக்கா எம்பி இல்ஹான் ஓமர், 4 நாள் பயணமாகப் பாகிஸ்தான் சென்று உள்ளார். இந்தப் பயணத்தில் அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இந்நாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சென்றுள்ளார். அமெரிக்கா எம்பி ஒருவர் பாக், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறுகிய மனப்பான்மை
இந்நிலையில், இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், "அத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதி இதுபோன்ற அரசியலைச் சொந்த நாட்டில் செய்யலாம். அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால், நமது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது வகையில் வெளிநாட்டிற்கு வந்து இப்படிச் செயல்படுவது சரியான நடைமுறை இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாக். பிரதமர் அலுவலகம்
அமெரிக்கா எம்பி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றுள்ளது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானின் கலாசாரம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் திறனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக அவர் லாகூர் ஜம்மு- காஷ்மீருக்குச் சென்று உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க எம்பியிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் சாடல்
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது ஆட்சியைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சதி உள்ளதாக இம்ரான் கான் சாடி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்த இம்ரான் கான், மக்கள் போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையே மேம்படுத்தும் வகையில் இப்போது அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் பாக். சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications