600 இந்திய வீரர்களுக்கு ஆபத்து? லெபனான் எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்.. ப்ளூ லைனில் உச்சக்கட்ட பதற்றம்
டெல்லி: லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநா அமைதி படை வீரர்கள் காயமடைந்துள்ளது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்திய வீரர்கள் 600 பேர் அங்கு இருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட போர் இப்போது மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இருவர் காயம்: அதன்படி இன்று காலை லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநா அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இந்தியாவும் இப்போது கருத்துச் சொல்லி உள்ளது. ஐநா பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
600 இந்தியர்கள்: லெபனானில் உள்ள ஐநா அமைதிப் படையில் இப்போது 600 இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் இப்போது தாக்குதல் நடந்த 120-கிமீ நீள இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
ஐநா அமைதி படை வீரர்கள் மீது தாக்குதல்! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்? நிலைமை ரொம்ப மோசம்
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ப்ளூ லைன் பகுதியில் (இஸ்ரேல்- லெபனான் எல்லை ப்ளூ லைன் என்று குறிப்பிடப்படும்) பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஐ.நா. அமைப்பினர் இருக்கும் இடங்களை அனைவரும் மதிக்க வேண்டும். ஐ.நா. அமைதிப் படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஐநா செய்திக்குறிப்பு: முன்னதாக ஐநா அமைப்பும் அமைதிப் படை வீரர்கள் மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது குறித்து ஐநா அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று காலை நகோராவில் உள்ள ஐநா அமைதிப் படை வீரர்கள் இருக்கும் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தினர். அதில் அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
நல்வாய்ப்பாக அவர்கள் மோசமாகக் காயமடையவில்லை. அதேநேரம் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
3ம் உலக போர் தொடங்கிடுச்சா? திடீரென ஐநா படைகள் மீதே இஸ்ரேல் தாக்குதல்.. உள்ளே வரும் உலக நாடுகள்?
மோசமடையும் நிலை: இஸ்ரேல் லெபனான் எல்லையில் நிலைமை மோசமடைந்தே வருகிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு அங்கு படுவேகமாக நிலைமை மோசடைந்துவிட்டது. அங்கு முதலில் ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், அடுத்த கட்டமாக தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு இஸ்ரேல் அதிகளவில் வீரர்களையும் குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. அதேநேரம் இது எதிர்பாராத வகையில் நடந்துவிட்டதாகக் கூறியுள்ளது. அதாவது ஐநா தளங்கள் அருகே இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இருப்பினும், எதிர்பாராத விதமாக ஐநா அமைதிப் படை வீரர்கள் அதில் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications