“ரெட் ஜோன்” இல் இந்தியா.. பத்திரிகை சுதந்திரத்தில் பாகிஸ்தான், ஆப்கானைவிட பரிதாபம்! ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: பத்திரிகை சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 11 இடங்கள் பின்னோக்கி சென்று 161 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மே 3 ஆம் தேதி சர்வதேச பத்திரிகையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு REPORTERS WITHOUT BORDERS எனப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஊடக சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் நார்வே முதலிடத்திலும் அயர்லாந்து 2 வது இடத்திலும், டென்மார்க் 3 வது இடத்திலும் உள்ளன. ஸ்வீடன் 4 வது இடத்திலும் பின்லாந்து 5 வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன.

வட கொரியா இந்த பட்டியலில் கடைசி இடத்தை தக்க வைத்து இருக்கிறது. சீனா 179 வது இடத்திலும், வியட்னாம் 178 வது இடத்திலும் ஈரான் 177 வது இடத்திலும் உள்ளன. துர்க்மேனிஸ்தான் 176 வது இடத்திலும் இருப்பதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கும் பத்திரிகை சுதந்திர தரவரிசையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தர வரிசையில் வல்லரசு நாடுகளான பிரான்ஸ் 24 வது இடத்திலும் பிரிட்டன் 26 வது இடத்திலும் அமெரிக்கா 45 வது இடத்திலும் உள்ளன. உக்ரைன் மீதான போர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா, இப்பட்டியலில் 164 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இப்பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வரும் இந்தியாவின் நிலை, இந்த ஆண்டும் மோசமான இடத்துக்கு சரிந்து உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா 2022 ஆம் ஆண்டில் 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 11 இடங்களில் சரிந்து 161 இடத்துக்கு சென்று உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 133 வது இடத்தில் பின் தங்கி இருந்த இந்தியா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் 90 வது இடத்திலும், நேபாளம் 95 வது இடத்திலும், மாலத்தீவுகள் 100 வது இடத்திலும் இலங்கை 136 வது இடத்திலும், பாகிஸ்தான் 150 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 152 வது இடத்திலும், வங்கதேசம் 163 வது இடத்திலும், மியான்மர் 173 வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் இந்த நிலை குறித்து எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "2014 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடியின் இந்து தேசிய வலதுசாரி கட்சியான பாஜகவின் ஆட்சியின் கீழ், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. அங்கு பத்திரிகை சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. 2023 ஜனவரியிலிருந்து இன்று வரை ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டு உள்ளார். 10 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்." என்றார்.












Click it and Unblock the Notifications