இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!
டெல்லி: ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தடையை விதித்திருக்கிறது. இந்த தடையை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது அமெரிக்க போர்க்கப்பல்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீறியதாகக் கூறி, 'எம்.டி. செட்டபெல்லோ' எனும் வணிக கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசியில் உரையாடிய ஜெய்சங்கர், இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் பேசினேன். வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் கடும் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தினேன். வணிகக் கப்பல்கள் மீது இத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்கள் நியாயமற்றவை," என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
தாக்குதலுக்குள்ளான 'எம்.டி. செட்டபெல்லோ' கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி ஜேசன் மீக்ஸ் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நேரில் அழைக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் இந்திய மாலுமிகள் இருந்த 3 கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பிற்கு இத்தகைய நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications