70% இந்திய பொருட்களுக்கு இனி வரி கிடையாது.. குட்நியூஸ் சொன்ன நியூசிலாந்து.. நாளை ஒப்பந்தம்
டெல்லி: ''இந்தியா - நியூசிலாந்து இடையே நாளை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக .ள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செயப்படும் 70 சதவீத பொருட்களுக்கான இறக்குமதி வரி பூஜ்ஜியமாக மாற்றப்பட உள்ளது'' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரிகளை விதித்து மிரட்டினார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்தது. அதன்பிறகு வரிகளை டிரம்ப் குறைத்தாலும் கூட அமெரிக்காவை மட்டுமே நம்பினால் தொழில் துறை பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது.

இதனால் பிற நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து உடன் முக்கிய ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையே நல்ல நட்பு உள்ளது.
நாளை கையெழுத்து
இந்நிலையில் தான் இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இருநாடுகள் இடையே நாளை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக நியூசிலாந்து சார்பில் அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையின் அமைச்சர் டாட் மெக்லே இந்தியா வந்துள்ளார்.
உறுதி செய்த பியூஷ் கோயல்
இவரை டெல்லி ஆக்ராவில் இன்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். அதன்பிறகு தான் பியூஷ் கோயல் வர்த்தக ஒப்பந்தம் பற்றி உறுதி செய்தார். இதுபற்றி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:
''இந்தியா - நியூசிலாந்து இடையே எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும். பல ஆண்டுகளாக உயர் மட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் அடங்கும்.
70% பொருட்களுக்கு வரி கிடையாது
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்து சந்தைக்கு செல்லும் இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏனென்றால் ஒப்பந்தப்படி நியூசிலாந்துக்கு செல்லும் இந்திய பொருட்களில் சுமார் 70 சதவீதம் எந்தவித இறக்குமதி வரியும் இல்லாம்ல அங்கு விற்பனை செய்ய முடியும். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.
இந்த ஒப்பந்தம் தோல், கைவினை பொருட்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட பல துறைகளுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும். இதன்மூலம் அடுத்த சில மாதங்களிலேயே இந்தியா - நியூசிலாந்து இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும்'' என்றார்.
பெருமைப்பட்ட நியூசிலாந்து
முன்னதாக இதுபற்றி நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டாட் மெக்லே கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது அவர், ''இந்தியாவுடனான உறவு மிகவும் வலிமையானது. உண்மையில் இது நான் அறிந்ததிலேயே மிகவும் வலிமையான உறவு. இந்தியாவின் உறவை நாங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருகிறோம்.
இருநாடுகள் இடையே பகிரப்பட்ட வரலாறு உள்ளது. தொடர்ந்து அதில் பணியாற்ற வேண்டும். வரும் ஆண்டுகளில் இந்தியா - நியூசிலாந்து இடையே நேரடி விமான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது சுற்றுலா, தடையற்ற வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications