சிந்து நதி நீருக்காக பாக். கெஞ்சல்! இந்தியாவின் டிமாண்ட் இதுதான்.. ஜெய்சங்கர் சுளீர்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலையடுத்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்திருப்பதால், ஒப்பந்தத்தை மீண்டும் தொடர பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. இதற்கு, "தீவிரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நம்பும் வகையில் பாகிஸ்தான் நிறுத்தாத வரை ஒப்பந்த நிறுத்தம் தொடரும்" என ஜெய்சங்கர் பதிலளித்திருக்கிறார்.
இது பாகிஸ்தானுக்கு சவாலான விஷயம்தான். இதற்கு முன்னர் இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானில்தான் திட்டமிடப்பட்டிருந்தது என்பது நிரூபணமான விஷயம். எனவேதான் இந்தியாவின் டிமாண்ட் பாகிஸ்தானுக்கு சவாலானதாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்தியா-பாக். இடையே ஏற்பட்டிருந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை மேற்கோள் காட்டி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீண்டும் ஏற்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாரமாக இருக்கும் சிந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியிருந்தது. ஆனால் இதற்கான பதில் இந்தியா தரப்பிலிருந்து ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தடுக்காதவரை இந்த ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படாது என்பதுதான் அது. அப்படி இருக்கையில், மீண்டும் பாகிஸ்தான் கெஞ்சியிருப்பது கவனம் பெற்றிருந்தது.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், "எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் மீது பாகிஸ்தான் செலுத்தும் ஆதரவு குறைக்கப்பட வேண்டும். பெயரளவுக்கு இல்லாமல் அதை நம்பகத்தன்மையுடன் சாத்தியப்படுத்த வேண்டும். அது செய்யப்படாதவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடரப்படாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை பாகிஸ்தான் காலி செய்வதுதான் காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே விஷயம்.
அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விவாதத்திற்கு வரலாம்" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும், அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பது என்பதன் அடிப்படையிலும்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சில குறைகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு எதிரானதாகவும் சில அம்சங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்தியா ஒப்பந்தத்தை செயல்படுத்தியது.
இதெல்லாம் நாங்கள் செய்யும்போது பாகிஸ்தான் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும்தானே? அது பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஒப்பந்தத்தின் அடிப்படை விதிகளையே மீறியுள்ளது" என்று தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா வலுவான பதிலடியை தொடங்கியது. அப்படித்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. 1960ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் போர் காலத்தில் கூட நிறுத்தி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications