ஆத்மநிர்பர் திட்டத்திற்கு பின்னடைவு? ஜெர்மனி டெக்னாலஜியில் நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் இந்தியா!
டெல்லி: இறக்குமதியை குறைத்து.. உள்நாட்டில் தயாரிப்புகளை அதிகரிக்க ஆத்மநிர்பர் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜெர்மன் தொழில்நுட்பத்தில், புதிய நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. இது இந்த திட்டத்தின் நோக்கத்தை கேள்வி எழுப்பியிருக்கிறது.
அடுத்த வாரம் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வர உள்ளார். இந்த வருகையின்போது, இந்தியாவுக்கு 6 எஸ்.எஸ்.கே தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரித்துக்கொடுக்க ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை ஜெர்மனியின் திசென்கிரப் மெரைன் சிஸ்டம்ஸ் மற்றும் இந்திய அரசின் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்.

ப்ராஜெக்ட் 75I
ப்ராஜெக்ட் 75I எனும் திட்டத்தின் கீழ் இந்த உற்பத்தி நடக்கும். இதற்காக ரூ. 70,000-90,000 கோடி வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் கடந்த 2021ம் ஆண்டே கையெழுத்தாகி இருக்க வேண்டும். ஆனால், திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இருந்து பல நாடுகள் விலகிக்கொண்டன. இதற்கு 4 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
1. நீர்மூழ்கி கப்பல் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டாலோ, தொழில்நுட்பத்தில் தவறு நடந்தாலோ அதற்கு வெளிநாட்டு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். அபராதம் செலுத்த வேண்டும்.
2. நீர்மூழ்கி கப்பலில் AIP எனும் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் உள்ள நீர் மூழ்கி கப்பல்களால், 2-3 வாரம் வரை மேற்பரப்புக்கு வராமல் தாக்குப்பிடிக்க முடியும். எனவே இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டில் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
3. வடிவமைப்பின் அனைத்து உரிமைகளும் இந்தியாவுக்கே சொந்தமாக கொடுக்க வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் நம்மால் சுயமாக இதுபோன்ற கப்பல்களை உருவாக்க முடியும்.
4. கப்பலை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் 100% இந்தியாவிலிருந்துதான் பெறப்பட வேண்டும்.
நிபந்தனை சிக்கல்கள்
இந்த 4 நிபந்தனைகளுடன் கப்பலை கட்டுவது என்பது சாதாரண வேலை கிடையாது. முதல் நிபந்தனையில், நிதி சிக்கல்கள் இருக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு என்பது தவிர்க்க முடியாதது. அப்படி ஏதேனும் நடந்தால் அபராதம் செலுத்த வேண்டும் எனில், நிச்சயம் நஷ்டம்தான் ஏற்படும். அதேபோல இரண்டாவது விஷயத்தில் தொழில்நுட்பத்தை நிரூபிக்க எந்த நாடுகளும் முன்வரவில்லை. குறிப்பாக ரஷ்யா, இந்த தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை என விலகிக்கொண்டது.
மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகள்
மூன்றாவது நிபந்தனையையும் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. 4வது நிபந்தனையை பொறுத்தவரை, இதற்கு சாத்தியம் இல்லை என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கூறின. எனவே கப்பல் கட்டுவதற்கான டெண்டர் மேலும் நீட்டிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில்தான் இந்தியா-ஜெர்மனி இடையே புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன்படி, நிபந்தனைகளை தளர்த்த இந்தியா முன்வந்தது. கப்பல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, தொழில்நுட்பத்தில் தவறு நடந்தாலோ அதற்கான அபராதத்தை 50-50 என இந்திய நிறுவனமும், ஜெர்மன் நிறுவனமும் ஏற்றுக்கொள்ளும்.
இந்தியாவின் கோரிக்கை
அதேபோல AIP தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ரகத்தைதான் இந்தியா கேட்டிருந்தது. AIP தொழில்நுட்பத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று Type 212, இரண்டாவது Type 214. இதில் Type 212 என்பது, கடலோர பகுதிகளில் மட்டும் பயன்படுத்த முடியும். அளவும் சிறியது. ஆனால் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. Type 214 என்பது அளவில் பெரியது. இதை இன்னும் எந்த நாடும் பயன்பாட்டில் கொண்டுவரவில்லை. அப்படி இருக்கையில் எங்கிருந்து செயல்பாட்டில் இருப்பதாக நிரூபிக்க முடியும்?
எனவே இந்த விதியை தளர்த்தி, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள Type 212 தொழில்நுட்பத்தை மட்டும் காட்டினால் போதுமானது என்று இந்தியா, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
அதேபோல, சில ரகசிய தகவல்களை தவிர மற்ற தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் என இந்தியா தெரிவித்தது. இதற்கும் ஜெர்மனி ஓகே சொல்லிவிட்டது.
ஆத்மநிர்பர் என சொல்லிவிட்டு..
கடைசி பாயிண்ட்தான் மிக முக்கியம். அதாவது கப்பலை கட்ட தேவையான பொருட்கள் 100% இந்தியாவிலிருந்தே பெற வேண்டும். நீர்மூழ்கி கப்பலை கட்ட ஸ்பெஷல் இரும்பு தேவை. இது இந்தியாவில் கிடைக்காது. எனவே தொடக்கத்தில் 45% இந்திய பொருட்களை கொண்டும், அடுத்தடுத்த கப்பல்களை கட்டும்போது 60% இந்திய பொருட்களும் பயன்படுத்தப்படும் என நிபந்தனைகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆத்மநிர்பர் என சொல்லிவிட்டு, காத்திருந்ததை விட, முன்னரே இந்த நிபந்தனைகளை தளர்த்தியிருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications