40 நாட்களுக்குப் பின் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழே குறைந்தது!
டெல்லி: இந்தியாவில் 40 நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 21 நாட்களில் கொரோனா மரணமும் நேற்று சற்று குறைந்துள்ளது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்தது. இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,96,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 40 நாட்களில் ஒருநாள் பாதிப்பு இந்தியாவில் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியதாக இருந்து வந்தது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,511 ஆக குறைந்துள்ளது. கடந்த 21 நாட்களில் இது குறைவான எண்ணிக்கை.

அதிக மரணங்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 592 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 529 பேரும் தமிழகத்தில் 404 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 207, கேரளாவில் 196, பஞ்சாப்பில் 187 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் 25,86,782. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,33,934 சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 9.60% ஆகும்.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
12-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,850 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் நம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,40,54,861 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பரிசோதனைகள்
கடந்த 24 மணி நேரத்தில் 20,58,112 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33,25,94,176 பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினசரி தொற்று உறுதி வீதம் 9.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

19.85 கோடி தடுப்பூசிகள்
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 28,41,151 முகாம்களில் 19,85,38,999 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 18-44 வயதுப் பிரிவில் 12.82 லட்சம் பயனாளிகளுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட மூன்றாவது கட்டத்தில், இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும்.


Click it and Unblock the Notifications
