ஹிஜாப் விவகாரத்தில் குரல் எழுப்பிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு.. இந்தியா கண்டனம்
டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தவறான கருத்தை தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள சில உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்துத்துவா மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் கல் வீச்சு சம்பவங்கள் ஏற்பட்டு வன்முறை வந்ததால் கர்நாடகாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக பள்ளிகள் இயங்கி வருகின்றன. கல்லூரிகள் இன்று திறந்துள்ளன. இந்த நிலையில் ஹிஜாப் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முஸ்லீம் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு வருகிறது.
ஹிஜாப்பிற்கு பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவித்த நிலையில் இது உள்நாட்டு பிரச்சினை என்பதால் வெளிநாடுகள் கருத்து சொல்ல வேண்டாம் என மத்திய அரசு பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) கருத்து கூறியுள்ளது.
சவூதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் சவூதி அரேபியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், இராக் உள்ளிட்ட 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா தனது மக்களின் உயிரை காக்கும் போது முஸ்லீம் சமூகத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என ஓஐசி கூறியது.
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில் ஹிஜாப் விவகாரத்தை இந்திய அரசு சட்ட ரீதியிலும் ஜனநாயக ரீதியிலும் பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் ஓஐசி செயலகத்தின் இனவாத மனநிலை இந்த யதார்த்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக கொடிய பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என சொந்த விருப்பத்துக்குள்பட்டு அந்த அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பின் நன்மதிப்புக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications