அசத்திய ‘அக்னி 5’.. அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!
டெல்லி: அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து 'அக்னி 5' சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக நடந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்ட் எனப்படும் ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை. இது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியின் மூலம், இதனால் இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமை இன்னும் அதிகரித்துள்ளது.
அக்னி-5 இன் முந்தைய சோதனை கடந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி நடத்தப்பட்டது, அப்போது DRDO பல சுயாதீனமாக இலக்கு வைக்கக்கூடிய MIRV தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. ஒரே ஏவுதலில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது.
அக்னி 5 ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுகிறது. உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணை மணிக்கு 29 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.












Click it and Unblock the Notifications