'எங்கள் கட்டமைப்பு வலுவாக உள்ளது, உங்கள் உதவி இப்போது தேவையில்லை'.. ஐநா உதவியை நிராகரித்த இந்தியா
டெல்லி: ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை எளிதாகப் பெற இந்தியாவுக்கு தேவையான உதவிகளைச் செய்ய ஐ.நா. முன்வந்த நிலையில், நாட்டின் விநியோக கட்டமைப்பு வலுவாக உள்ளதாகக் கூறி ஐநாவின் உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாகவே மூன்று லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் புதிதாக 3.79 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், கொரோனா 2ஆம் அலை வரும் வாரங்களில் பல மடங்கு அதிகரித்து உச்சத்தை அடையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே மருத்துவமனைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை கிடைத்தாலும், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலங்களும் தொடர்கிறது. கொரோனா 2ஆம் அலை நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐநா உதவி
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைச் சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், ஐநாவின் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை இந்தியா எளிதாகப் பெறத் தேவையான உதவிகளைச் செய்து உதவ ஐநா முன்வந்துள்ளது.

உதவி தேவையில்லை
இருப்பினும், கொரோனா சிகிச்சை உபகரணங்களை வாங்க தங்களிடம் வலுவான கட்டமைப்பு உள்ளதாகக் கூறி, ஐநாவின் உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இத்தகவலை ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டடெரெஸின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபா்ஹான் ஹக் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கொரோனா சிகிச்சை உபகரணங்களை எளிதாகப் பெற ஐநா உதவ முன்வந்தது.

உதவ தயாராக உள்ளோம்
இருப்பினும், தற்போதைய நிலையில் ஐ.நா.வின் உதவி தேவைப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துவிட்டது. அதேநேரம் அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது. ஐநாவின் உதவி எப்போது தேவை என இந்தியா கருதுகிறதோ, அப்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவாக்கு செய்ய தயாராக உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஐநா தகவல்
மேலும், கொரோனா 2ஆம் அலை காரணமாக இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் ஐ.நா. தலைமைச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின், தனிச் செயலர் மரியா லூயிஸா இபெய்ரு வையட்டி ஆகியோர் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திரிமூர்த்தியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல ஐநா அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தேவையான உதவிகளைச் செய்ய எப்போதும் தாயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக நாடுகளிடம் கோரிக்கை
ஐநா பொதுச் சபைத் தலைவர் வோல்கன் போஸ்கிர் கூறுகையில், "கொரோனா பாதிப்பு உள்ள அனைத்து நாடுகளிலும் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்களுக்குத் தக்க நேரத்தில் கொரோன தடுப்பூசி அளித்த நாடு இந்தியா. இது நமக்கான தருணம், இந்தியாவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பைச் சமாளிக்க இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications