டிரம்ப் பிரஷருக்கு அடிபணிந்த மத்திய அரசு? வர்த்தக டீல் வந்தாலும்.. விடை தெரியாமல் உள்ள 5 கேள்விகள்
டெல்லி: நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம் இந்த டீல் தொடர்பாக 5 மிக முக்கியமான கேள்விகள் உள்ளன. அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் நேற்று அறிவித்தார். பிரதமர் மோடியும் இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதேநேரம் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னுமே கூட விடை கிடைக்காத சில கேள்விகள் உள்ளன. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தெளிவு இல்லை
1. டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி இருப்பதை எதைக் குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவு இல்லை. வரி குறைப்பை அவர் சொல்கிறாரா இல்லை இந்தியா அமெரிக்கா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்துக் குறிப்பிடுகிறாரா என்பதில் தெளிவு இல்லை. அதாவது இந்தியா ஐரோப்பா இடையே Free Trade Agreement இறுதியானதாக அறிவிப்பு வெளியானது. அதுபோன்ற ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறாரா.. இல்லை வரி குறைப்பை மட்டும் சொல்கிறாரா என்பதில் தெளிவு இல்லை.
அமெரிக்காவின் வரியை ஜீரோவாக குறைப்பது, இதர தடைகளை நீக்குவது தொடர்பாக ட்ரம்பின் கருத்தை இந்தியா இதுவரை உறுதி செய்யவில்லை. மேலும், எந்தப் பொருட்களுக்குப் பொருந்தும் என்பதும் தெளிவில்லை. சோயாபீன், பால் பொருட்கள் போன்ற விவசாயத் துறைகளில் அமெரிக்காவின் இறக்குமதியை இந்தியா அனுமதிக்குமா என்பதில் பதில் இல்லை.
வரி அதிகமா?
2. இந்தியா மீது கடந்தாண்டு அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் வியட்நாம் (20%), பாகிஸ்தான் (19%), சீனா (34%) ஆகியவற்றை விட குறைவாகும். இதனால் அவர்களுடன் போட்டிப்போட இந்தியாவில் முடியவில்லை. இப்போது வரி 18% ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், அது ஆடை, ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியாளர்களுக்கு பிளஸ் பாயிண்டு!
அதேநேரம் இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது சில ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா 5% சிறப்பு GSP தருகிறது. அதாவது வரியில் 5% குறையும். ஆனால், இந்தியாவுக்கு இந்தச் சலுகை இல்லை. எனவே, 15% அல்லது அதற்குக் கீழ் வரி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். 18% போதாது எனச் சில வியாபாரிகள் கருதுகின்றனர்.
ரஷ்ய இறக்குமதி
3. அடுத்து விடை கிடைக்காத மற்றொரு மிக முக்கியமான கேள்வி.. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி. ரஷ்ய எண்ணெய்யை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து அதிகக் கச்சா எண்ணெய் வாங்கப் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக டிரம்ப் கூறினார். இருப்பினும், இதை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்யவில்லை.
கடந்த காலங்களில் இந்தியாவின் ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக அமெரிக்கா பேசிய போதெல்லாம் அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தே வந்தது. இந்தியாவின் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என இந்தியா கூறியது. மேலும், உடனடியாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டால் இந்தியா ரஷ்யா உறவும் பாதிக்கப்படும். இதனால் இந்தியா இதில் என்ன முடிவெடுக்கும் என்பதில் தெளிவு இல்லை.
அடி பணியும் இந்தியா?
4. கடந்த 2019இல், ட்ரம்பின் பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலால், அப்போது ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இப்போது ரஷ்ய கச்சா எண்ணெய்யை நிறுத்தும் என டிரம்ப் கூறியிருக்கிறார். இது மத்திய அரசின் முடிவுகள் மற்றும் அதன் தன்னாட்சி குறித்து சந்தேகங்களை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.
ஈரானுடன் "வர்த்தகம் செய்யும்" நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து இருந்த நிலையில், ஈரான் உடனான வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதாக ஆங்கில நாளேடான இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி வரிசையாக வரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் எங்கு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிகிறதோ என்ற கேள்வி வருகிறது.
மிக முக்கியம்
5. அடுத்து மிக முக்கியமான கேள்வி அமெரிக்காவுக்கு இந்தியா அளித்த வாக்குறுதி என்ன.. அமெரிக்க எனர்ஜி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட $500 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை இந்தியா வாங்கும் என டிரம்ப் குறிப்பிட்டார். இந்திய ரூபாய் மதிப்பில் இது 45 லட்சம் கோடி ரூபாயாகும். உண்மையில் இவ்வளவு மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குமா.. எத்தனை ஆண்டுகளில் வாங்கும் என எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. இத்தகைய உறுதிமொழி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கும் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது!












Click it and Unblock the Notifications