கடைசி நொடியில் இந்திய டீமிற்கு பறந்த மெசேஜ்.. "இப்போ போக வேண்டாம்.." அமெரிக்க பயணம் ரத்து! பின்னணி
டெல்லி: அமெரிக்கா உடனான வர்த்தக டீலை இறுதி செய்ய இந்திய வர்த்தகக் குழு அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லாம் முடிந்து டீல் இறுதியாகும் சூழலில், இந்திய டீம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா மீது அமெரிக்கா கடந்தாண்டு 50% வரிகளை விதித்து இருந்தது. இது தொடர்பாக இரு நாடுகளும் தீவிரப் பேச்சுவார்த்தையை நடத்தியது. சில காரணங்களால் இந்த வர்த்தக டீல் இறுதியாவதில் குழப்பம் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் இம்மாதத் தொடக்கத்தில் வர்த்தக டீல் இறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இந்தியா- அமெரிக்கா
அதைத் தொடர்ந்தே இந்தியா மீதான வரிகள் 50%இல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது. இது இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய நிம்மதி கொடுக்கும் அறிவிப்பாகவே இருந்தது. மேலும், இந்தியா டீம் ஒன்றும் அமெரிக்கா செல்லவிருந்தது. அவர்கள் வர்த்தக டீலை இறுதி செய்வார்கள் என்று சொல்லப்பட்டது. வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான இந்தியக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்குச் செல்லும் என்றும் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் எனச் சொல்லப்பட்டது.
கடைசி நேரத்தில் ரத்து
இந்த மூன்று நாள் பேச்சுவார்த்தையில் அனைத்தும் இறுதி செய்யப்படும். இரு தரப்புக்கும் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவுப் பணிகளை இந்த டீம் முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் திடீரென இந்திய டீமின் அமெரிக்கப் பயணம் ரத்தாகியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, இந்திய வர்த்தக டீமின் அமெரிக்கப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இதுவே காரணம் என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காரணம்
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்த பிறகே, இந்தியக் குழு அமெரிக்காவுக்குச் செல்லும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். தேதியை மாற்றியமைக்கும் முடிவு இரு தரப்பாலும் எடுக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்து இந்தியா டீம் அமெரிக்கா செல்லும் தேதி இதுவரை இறுதியாகவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
1977 சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி, டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்திருந்தார். இருப்பினும், அந்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகவும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதுவே பிரதானக் காரணமாகும்.
புதிய வரி
இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த டிரம்ப், இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு சட்டத்தைப் பயன்படுத்தி வரிகளை அறிவித்தார். அதில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மறுநாள், இந்த ஒட்டுமொத்த வரியை 15%ஆக மேலும் உயர்த்தினார். இந்த வரிகள் 150 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதை எதிர்த்தும் அங்கு வழக்குகள் தொடரப்படும் என்றே தெரிகிறது.
அடுத்து என்ன?
முன்னதாக, 2025 ஆகஸ்டில் இந்தியா மீது அமெரிக்கா 25% பரஸ்பர வரியை விதித்திருந்தது. பின்னர், ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்தன. இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மீதான வரி 50%ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்படும்.
இந்த டீலை இறுதி செய்ய அமெரிக்கா செல்லவிருந்த இந்திய டீமின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் பேசி ஒரு புதிய தேதியில் மீண்டும் இந்த மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications