"இந்தியா vs பாகிஸ்தான்.." சுதந்திரமடைந்து 78 ஆண்டுகள் ஆச்சு! இரு நாடுகளும் இப்போது எப்படி இருக்கிறது
டெல்லி: இந்தியா இன்று தனது 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பாகிஸ்தான் நேற்றைய தினம் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரு நாடுகளும் சுதந்திரத்தின் போது ஒரே இடத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கிய சூழலில், இப்போது இரு நாடுகளும் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றன. இரு நாடுகளும் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் மிகப் பெரிய சுரண்டல்கள் நடந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தது.

இந்தியா vs பாகிஸ்தான்: 1947ம் ஆண்டு இரு நாடுகளும் ஒரே இடத்தில் இருந்து தான் தங்கள் பயணங்களை ஆரம்பித்தன. ஆனால், இன்று 78 ஆண்டுகள் கழித்து கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது. மறுபுறம் பாகிஸ்தான், அரசியல் அமைதியின்மை ஏகப்பட்ட ராணுவ ஆட்சி கவிழ்ப்புகளால் பல துறைகளில் திணறியே வருகிறது. இப்போது 78 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரே இடத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய இந்த இரு நாடுகள் இப்போது எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
பொருளாதாரம்: இந்தியா $3.937 டிரில்லியனுடன் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் இந்தியா ஜப்பான், ஜெர்மனி நாடுகளை ஓவர்டேக் செய்து மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 4 டிரில்லியனை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தற்போது 6.5-7 சதவீத வளர்ச்சியைக் கொண்டு இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் 374,90 பில்லியன் டாலர்களுடன், உலகின் 46வது பெரிய பொருளாதாரமாக மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானின் வளர்ச்சி வெறும் 2.38% ஆக மட்டுமே இருக்கிறது.
தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது 2023-24 நிதியாண்டில் அது ரூ.2.12 லட்சமாக உள்ளதாகப் பொருளாதார வல்லுநர் வி அனந்த நாகேஸ்வரன் கூறுகிறார். அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் அது $2,500ஆக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் $1,680ஆ மட்டுமே இருக்கிறது.
உள்கட்டமைப்பு: உள்கட்டமைப்பை எடுத்துக் கொண்டால் இந்தியா அசுர பாய்ச்சலை அடைந்து இருக்கிறது எனச் சொல்லலாம். வந்தே பாரத், எக்ஸ்பிரஸ்வேஸ், கிரீன்ஃபீல்ட் காரிடர்கள், பாரத்மாலா திட்டங்கள் உள்ளிட்டவை நமது சமீபத்திய சாதனைகள். மேலும், இந்தியாவில் இப்போது சென்னை, பெங்களூர் உட்பட குறைந்தது 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. இது தவிர வந்தே பாரத் ரயில் திட்டங்களும் தனியாக நடந்து வருகிறது.
பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருப்பது இந்த உள்கட்டமைப்பில் தான். அங்கே இப்போது வரை ஒரே ஒரு நகரில் மட்டுமே மெட்ரோ இருக்கிறது. அங்கு நிலவும் அரசியல் குழப்பங்களால் சமீப காலங்களில் பெரிய திட்டங்கள் எதையும் அந்நாட்டு அரசால் செய்ய முடிவதில்லை.
அந்நியச் செலாவணி: அந்நியச் செலாவணியைப் பொறுத்தவரை 1960களில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 0.67 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது 2024ல் அது 674.919 பில்லியன் டாலராக உள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை 1960களில், அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு $032 ஆக இருந்தது. 2024ல் அதன் கையிருப்பு 8.21 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. பணவீக்கம் இந்தியாவில் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் அது உச்சத்திற்கே சென்றுவிட்டது.
பாதுகாப்புத் துறை: பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை நாம் பட்ஜெட்டில் சுமார் 12.9% தொகையை ராணுவத்திற்கு ஒதுக்குகிறோம். அதாவது 6.219 டிரில்லியன் ரூபாயை ராணுவத்திற்கு ஒதுக்குகிறோம். பாகிஸ்தான் ஆண்டுக்கு ரூ.2,122 பில்லியனை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது. கல்வியறிவு விகிதம் இந்தியாவில் இப்போது 74% ஆக இருக்கிறது. ஆண்களில் 82.4% பேரும் பெண்களில் 65.8% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் கல்வியறிவு 58%ஆக மட்டுமே இருக்கிறது. அங்கே ஆண்கள் 69.3% மற்றும் பெண்கள் 46.5% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications