காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. ஏவுகணை, வான்வழி தாக்குதலுக்கு ரெடியாகும் இந்தியா? நிபுணர்கள் கணிப்பு
டெல்லி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்க, இந்தியா ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வான் வழி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது. அதே பாணியை மீண்டும் ராணுவம் கையில் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா எந்த மாதிரியான பதிலடி கொடுக்கும் என்பது பற்றி பிபிசி ஆங்கில செய்தி ஊடகம் சமீபத்தில் நிபுணர்களின் கணிப்பை வெளியிட்டிருந்தது. இதில், அமெரிக்காவின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் உதவி பேராசிரியரும், அரசியல் ஆய்வாளருமான கிறிஸ்டோபர் கிளாரியின் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இவர், இந்திய எந்த மாதிரியான பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை விளக்கியிருக்கிறார். முதல் கட்டமாக LoC தாக்குதலை இந்தியா நடத்தும் என்று கூறியுள்ளார். அதாவது 1947க்கு பிறகு இந்தியா-பாகிஸ்தானுக்கு இதுதான் எல்லை என்பது பிரிக்கப்பட்டிருந்தது. இந்த எல்லையை தான் LoC என்று கூறுவார்கள். இதனை கடந்து சென்று எதிரி தரப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவே LoC தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.
இதை சர்ஜிகல் ஸ்டிரைக் என்று சொல்வார்கள். கடந்த 2016ம் ஆண்ட உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இதனை நடத்தியது. அதேபோல 2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது.
இது தவிர ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்று கிறிஸ்டோபர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிடம் உலகின் மிக வேகமான ஏவுகணைகள் இருக்கின்றன. குறிப்பாக ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணைகள் இருக்கின்றன. இதனை நிலத்திலிருந்தும், கடலிலிருந்தும், வான் வழியிலிருந்தும் பயன்படுத்த முடியும். அதேபோல நிர்பாய், பிரித்வி, அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளும் இருக்கின்றன. இவற்றை கொண்டு எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
மூன்றாவதாக கடந்த 2019ல் விமானப்படை நடத்தியதை போன்று வான்வழித் தாக்குதலையும் இந்தியா நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கிறிஸ்டோபர் கணித்திருக்கிறார்.
தெற்காசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ அரசியல்தான் கிறிஸ்டோபரின் முக்கிய ஆராய்ச்சி துறை. இந்தியா-பாக். உறவுகள், ராணுவ தந்திரங்கள் மற்றும் அணு ஆயுத விவகாரங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் இந்திய பாதுகாப்பு கொள்கை வட்டாரங்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான் கிறிஸ்டோபரின் கணிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications