போர் பாதுகாப்பு ஒத்திகைக்கு இடையே.. இந்திய விமானப்படையின் அதிரடி பிளான்.. அரண்டு போன பாகிஸ்தான்!
டெல்லி: போர் பாதுகாப்பு ஒத்திகைக்கு நடுவே விமானப்படையும் மிகப்பெரிய அளவில் போர் பயிற்சி நடத்த உள்ளது. இந்திய விமானப்படை நாளை ராஜஸ்தானில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்தது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
முழு சுதந்திரம் கொடுத்த மோடி
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார்.
இந்நிலையில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பிரதமர் மோடியை அண்மையில் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது கவனம் பெற்றது.
கடந்த முறை
கடந்த 2016-ல் உரி பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தி தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் குண்டு வீசின.
ராஜ்நாத் சிங் சொன்ன விஷயம்
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் நடைபெறும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்காக, நமது எதிரிகளுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறினார்.
போர் ஒத்திகை
இந்நிலையில், நாடு முழுவதும் நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப்படை நாளை ராஜஸ்தானில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை வீரர்களுக்கு இதுகுறித்து இன்று மாலை ஒரு NOTAM அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை பயிற்சி
விமானப்படையின் இந்தப் போர் பயிற்சி நாளை இரவு 9.30 மணியளவில் தொடங்கி சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை போர் பயிற்சி காரணமாக அப்பகுதியில் வான் வழித்தடங்கள் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயிற்சியின் விவரங்கள் முழுமையாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட வான்வெளி பயன்பாட்டை குறிக்கும் NOTAM வெளியாகி இருப்பதால் இது இந்திய விமானப்படையை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிக்கான தயாரிப்பு என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications