பொருளாதாரம் மோசமாக போய் கொண்டு இருக்கிறது.. 4 விஷயங்களை பின்பற்றுங்கள்.. ப.சிதம்பரம் சொல்லும் யோசனை
டெல்லி: நாட்டு பொருளாதாரம் மீள்வதற்கான வழி தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து, இன்று, நிருபர்களிடம், வீடியோ வாயிலாக பேட்டியளித்தார் ப.சிதம்பரம்.
அப்போது ப.சிதம்பரம் கூறியதாவது: இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக, இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுள்ளது. மைனஸ் 8.6 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக, பொருளாதாரம் மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. 2019-20ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், 5.2 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மைனஸ் 23.9 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.
கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 8.6 சதவீதமாகப் போகிறது. நமது பொருளாதார வளர்ச்சி கடந்த வருடத்தை ஒப்பிடும்போது மிக மிக குறைவாக இருக்கிறது. அடுத்த இரண்டு காலாண்டுகளும் நெகட்டிவ் நிலையில்தான் பொருளாதாரம் செல்லுமோ என்று நான் அச்சப்படுகிறேன்.
மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு, மூன்றாவது காலாண்டில் பாசிட்டிவ் வளர்ச்சிஇருக்கும் என்று தெரிவிக்கிறார். ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஏற்கனவே மூன்றாவது காலாண்டில் ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை.
நான்கு விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு இப்போது மிகவும் அவசியம்:
விவசாயிகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற வேண்டும். ஆனால் விவசாயிகளில் குறுகிய பகுதியினரே குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுகிறார்கள். அதையும் கூட சமீபத்தில் கொண்டுவந்த விவசாய மசோதாக்கள் கேள்விக்குறியாக்கிவிட்டன.
வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் கைகளுக்கு நேரடியாக பணம் சென்று சேராவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் பங்களிக்க முடியாது. அவர்கள் கையில் பணப்புழக்கம் இருந்தால்தான் சந்தையில் தேவை அதிகரிக்கும். NYAY போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இழந்த வேலைவாய்ப்புகளை மறுபடியும் கொடுப்பது அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம், 6.4 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது.
மாநில அரசுகள் 2.7 லட்சம் கோடி அளவுக்கு, மேல் மூலதன முதலீட்டை குறைக்க உள்ளன. மாநில அரசுகளிடம் கூடுதல் நிதி இல்லாவிட்டால் பணப்புழக்கம் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications