திடீரென.. இஸ்ரேல் பிரதமருக்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன விஷயம்?
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்ரேலுடனான நட்புறவு அதிகரித்தது.
சர்வதேச அரங்கில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர்.

இஸ்ரேலின் புதிய பிரதமர்
இஸ்ரேலை கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நேதன்யாகு கடந்த முறை நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறாமலேயே ஆட்சியை தொடர்ந்து வந்தார். இதற்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நஃப்தாலி பென்னட் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு வர இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு
இருப்பினும் இந்தியா இஸ்ரேல் உடனான நட்புறவு தொடர்ந்து வருகிறது. ஸ்காட்லாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேசினர். அப்போது நஃப்தாலி பென்னட் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட நஃப்தாலி பென்னட் ஏப்ரல் 2 ஆம் தேதி அரசுமுறை பயணமாக முதல் தடவை இந்தியாவுக்கு வருகை தர இருந்தார்.

கொரோனாவால் ரத்தான பயணம்
ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது முதல் இந்திய பயணம் ரத்தானது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி - இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நஃப்தாலி பென்னட் விரைவில் நலமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் இஸ்ரேலில் அண்மையில் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.

உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து பேச்சு
இந்த தொலைப்பேசி உரையாடலின்போது இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம், புவிசார் அரசியல் மேம்பாடுகள் தொடர்பாக விவாதித்தனர். பிரதமர் நரேந்திர மோடி உடனான தொலைபேசி உரையாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், "உங்களுடன் உரையாடியது சிறப்பாக இருந்தது நண்பரே... உங்களை விரைவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்." என்றார்.

பெகாசஸ் சர்ச்சை
இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், செயல்பாட்டாளர்களின் செல்போனை ஹேக் செய்து உளவு பார்த்ததாக ஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த பிரச்சனை பூதாகரமான நிலையில் இஸ்ரேல் பிரதமர் உடனான மோடியின் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications