வலுவான அரசு அமைகிறது! வளர்ச்சி தொடரும்- ரிசல்ட் வெளியான பின் முதல்முறையாக செய்தியாளரிடம் மோடி பேச்சு
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்கப் பிரதமர் மோடிக்குக் குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்த நிலையில், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் செவ்வாய்க்கிழமை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது.

பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்ற போதிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியுடன் ஆட்சி அமைக்கிறது.
இதற்கிடையே இன்று டெல்லியில் என்டிஏ கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவர் ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். இதற்கிடையே குடியரசுத் தலைவர் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, என்டிஏ கூட்டணி வலுவான அரசை அமைக்கும் என்றார். மேலும், 18வது மக்களவை ஒரு புதிய தொடக்கத்தை வித்திட்டுள்ளது என்ற அவர் நாட்டை 3வது முறையாக வழிநடத்த வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி என்றும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.
10 ஆண்டுக்கால அனுபவத்தைக் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம் என்ற அவர், அதே உற்சாகத்துடன் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் உலகம் நெருக்கடியைச் சந்தித்த நிலையில், சவாலை இந்தியா எதிர்கொண்டு வென்றது என்றும் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்ட போதிலும் நமது பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications