ஜர்க் ஆன பாக்.! விமானப்படை தளம் தாக்குதலுக்கு இவ்வளவு பதற்றம் ஏன்? இந்தியாவின் நோக்கம் இதுதான்
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியதால் அந்நாட்டு அரசு கடுமையான அச்சமடைந்தது. விமானப்படை தளம் மீதான தாக்குதலுக்கு இவ்வளவு அச்சம் ஏன்? இந்திய விமானப்படையின் நோக்கம் என்ன? என்பதை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியா விமானப்படை தளத்தை குறி வைக்க தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் தொடங்கி பஞ்சாப் வரை 15 விமானப்படை தளங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது.

எனவே இந்தியா தனது பதிலடியை தீவிரப்படுத்தியது. மொத்தம் 11 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை பயன்படுத்தி துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்தான் பாகிஸ்தானை பீதியடைய செய்திருக்கிறது.
இந்தியா நடத்திய தாக்குதலின் விவரங்கள் செயற்கைக்கோள் படங்களாக வெளி வந்திருக்கிறது. இந்தியா தாக்கியதில் ரஃபிகி, முரித், நூர் கான், ரஹிம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர் மற்றும் சியால்கோட் ஆகிய விமான தளங்கள் மிக முக்கியமானதாகும். நம்முடைய தாக்குதலில் ரஹீம் யார் கான் விமானப்படை தளத்தில் ஓடுபாதையின் மீது மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. பஸ்ரூர், சுனியன் மற்றும் அரிஃப்வாலா ஆகிய இடங்களில், வான் பாதுகாப்பு ரேடார்கள் சேதமடைந்தன.
இதில் மிக முக்கியமான பகுதி ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள சக்லாலாவில் உள்ள நூர் கான் விமானப்படை தளம்தான். ஏனெனில், இந்த விமான நிலையத்தில்தான் முக்கிய விமான போக்குவரத்து நடைபெறுகிறது. C-130 ஹெர்குலஸ் மற்றும் IL-78 போன்ற நடு-வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இங்கிருந்துதான் புறப்படும். சுருக்கமாக சொல்வதெனில் இந்த விமானப்படை தளம்தான் பாகிஸ்தான் விமானப்படையின் இதயம் என்றே சொல்லலாம்.
இது எல்லாவற்றையும் விட முக்கியம், அந்நாட்டின் அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிடும் அமைப்பின் தலைமையிடம் இந்த விமானப்படை தளத்திற்கு அருகில்தான் அமைந்திருக்கிறது.
இந்த அமைப்புதான் அணு ஆயுத தாக்குதலை திட்டமிடும். இது இல்லையெனில் அணு ஆயுத தாக்குதலை நடத்துவதும், அணு குண்டை இடைமறிப்பதும் சாத்தியமில்லாமல் போகும். இந்த அளவுக்கு முக்கியமான அமைப்பை அடித்து நொறுக்கிவிடுவோம் என்பதை எச்சரிக்கவே இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது, என்று பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை நன்கு அறிந்த ஒரு முன்னாள் அமெரிக்க அதிகாரி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
அதேபோல சர்கோதாவில் உள்ள முஷாஃப் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியதையும் மிக முக்கியமான விஷயமாக பாகிஸ்தான் கருதுகிறது. இந்த விமானப்படை தளம் கிரானா மலைகளுக்கு அடியில் உள்ள நிலத்தடி அணுசக்தி சேமிப்பு தளங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் மேலோட்டமாக தாக்குதலாக தெரிந்தாலும், அந்நாட்டு ராணுவ வட்டாரத்திற்கு உண்மை தெரிந்திருக்கிறது. அதாவது, மோதல் மேலும் அதிகரித்தால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை செயலிழக்க வைக்க முடியும் என்பதைத்தான் இந்த தாக்குதல் காட்டுகிறது.
எனவேதான் பாகிஸ்தான் அரசும், அதன் மக்களும் மிகுந்த அச்சம் கொண்டனர். இதனையடுத்துதான் அமெரிக்காவை வைத்து மத்தியஸ்தம் பேசி சண்டை நிறுத்தத்தை பாக் கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications