ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கிடைக்கும் ஆதாயம் 22 ஆயிரம் கோடி தான்.. ஆனால்!
டெல்லி: ரஷ்யா நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கிடைக்கும் ஆதாயம் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மட்டும்தான் என்று ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 40 சதவீதம் அளவிற்கு ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குகிறது. நாள் ஒன்றுக்கு 54 லட்சம் பீப்பாய் வாங்குகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடி முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடிவரை ஆதாயம் வருவதாக கூறப்படுவது பொய் என்கிறார்கள். ஆனால் இப்போது டிரம்பின் வரி விதிப்பால் கற்பனை செய்ய முடியாத இந்தியா சிக்கலை சந்தித்துள்ளது.
இந்தியா தன்னுடைய பணத்தை அதிக அளவில் வெளியே இழக்க கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக உள்ளது. மிகப்பெரிய அளவில் இறக்குமதிக்கு இந்தியா செலவு செய்வது தான் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரமே கச்சா எண்ணெய் இறக்குமதியை மையமாக வைத்து தான் இருக்கிறது. இந்தியாவிடம் எல்லா வளமும் இருந்தாலும் எண்ணெய் வளம் இல்லை. அதனை அரபு நாடுகளிடமும், ரஷ்யாவிடமும் இந்தியா வாங்கி வருகிறது.

தினமும் 54 லட்சம் பீப்பாய்
உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. தனது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே ரஷியாவிடம் இந்தியா வாங்கி வந்தது. தற்போது, அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் போரை முன்வைத்து, ரஷியா மீது மேலை நாடுகள் நடவடிக்கை எடுத்ததால், ரஷியா அதிகமான தள்ளுபடி கொடுத்தது. அதனால் இந்தியா தனது கொள்முதலை அதிகரித்திருந்தது. இதனை ஆரம்பம் முதலே அமெரிக்கா கண்டித்து வருகிறது. ஆனால் இந்தியா இதனை ஏற்கவில்லை.. தற்போது நாள் ஒன்றுக்கு 54 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
டிரம்ப் குற்றச்சாட்டு
இந்நிலையில் தள்ளுபடி விலையில் ரஷிய கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரித்து, பிற நாடுகளுக்கு அதிக விலையில் பெட்ரோல், டீசலாக விற்று இந்தியா கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அந்த பணம் தான் உக்ரைன் போர் முடியாமல் போக காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.
50 சதவீதம் வரி விதிப்பு
அதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த வரிவிதிப்பு அண்மையில் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் எல்லா மாநிலங்களிலும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடல் உணவு ஏற்றுமதி, ஜவுளி, நகை ஏற்றுமதி, என்ஜினிரியங் பொருட்கள் போன்ற துறைகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2 லட்சம் கோடி லாபமா?
இந்த சூழலில் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடி முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடிவரை ஆதாயம் அடைந்து வருவதாக யூகங்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்தியா அடையும் ஆதாயம் மிகைப்படுத்தப்படுவதாக 'சி.எல்.எஸ்.ஏ.' என்ற தரகு நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாயம் குறைவு
கடந்த 2023-2024 நிதியாண்டில் ஒரு பீப்பாய்க்கு 8.5 டாலர் வீதம் ரஷியா தள்ளுபடி அளித்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த தள்ளுபடி 3 முதல் 5 டாலராக குறைந்து விட்டது. சராசரியாக 4 டாலர் தள்ளுபடி என்று வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு 250 கோடி டாலர் (ரூ.22 ஆயிரம் கோடி) ஆதாயம் மட்டுமே கிடைக்கும். மேலும், கடந்த சில மாதங்களாக தள்ளுபடி 1.5 டாலராக குறைந்து விட்டது. எனவே, ஆதாயம் ரூ.8 ஆயிரத்து 700 கோடியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
அதேநேரம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், ரஷ்யாவால் வேறு நாடுகளை பிடிக்க முடியாது. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 முதல் 100 டாலர்வரை உயர்ந்து விடும். உலகம் முழுவதும் பணவீக்கமும் அதிகரித்து விடும் என்று 'சி.எல்.எஸ்.ஏ.' தரகு நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications