ஆலங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம்.. நடுவானில் உடைந்த முன்பகுதி.. அலறிய பயணிகள்! வீடியோ
டெல்லி: டெல்லியில் இருந்து காஷ்மீருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென நேற்று ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானத்தின் முன்பகுதி மிகக் கடுமையாகச் சேதம் அடைந்து பயங்கரமாகக் குலுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
பொதுவாகவே மற்ற பொது போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமானங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கிறது. விமானங்களில் பின்பற்றப்படும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளே இதற்குக் காரணமாகும். இருப்பினும், அதையும் தாண்டி சில சமயம் விமானம் வானிலை காரணமாகப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும்.

டர்புலன்ஸ்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. திடீர் வானிலை மாற்றத்தில் சிக்கிய இண்டிகோ விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. நேற்று புதன்கிழமை மாலை டெல்லியிலிருந்து காஷ்மீர் ஸ்ரீநகருக்கு 227 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் கடுமையான டர்புலன்ஸில் (turbulence) சிக்கிக் கொண்டது. இதனால் விமானம் நடுவானில் பயங்கரமாகக் குலுங்கிய நிலையில் பயணிகள் பீதியடைந்தனர். இந்த திடீர் டர்புலன்ஸ் காரணமாக விமானத்தின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
என்ன நடந்தது?
6E2142 என்ற அந்த இண்டிகோ விமானம் காஷ்மீரை நெருங்கும்போது தான் அது டர்புலன்ஸில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட விமானி, அவசர நிலையை அறிவித்தார். இதையடுத்து இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும் டர்புலன்ஸில் சிக்கிக் குலுங்கியதில் அவர்கள் ரொம்பவே பயந்து போய் இருந்தனர்.

ஷாக் வீடியோ
விமானம் டர்புலன்ஸில் சிக்கிய போது உள்ளே என்ன நடந்தது என்பதைக் காட்டும் வகையிலான ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். அதில் மழை மேகங்கள் காரணமாக விமானத்தின் உட்பகுதி பயங்கரமாகக் குலுங்குவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இதனால் பயணிகள் அலறி கத்துவதையும் கேட்க முடிகிறது. பலரும் கீழே விழுந்துவிடாமல் இருக்க தங்கள் சீட்டின் முன்பக்கத்தை இறுக்கிப் பிடித்தபடி இருப்பதும் அதில் தெரிகிறது.
விமானம் இந்தளவுக்குக் குலுங்கினாலும், அதில் இருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் காரணமாக உள்ளே யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கிய பிறகு அனைத்து பயணிகளும் விமானக் குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது.

அதிகாரிகள் சொல்வது என்ன?
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் இண்டிகோ விமானம் 6E2142 மோசமான வானிலை, அதாவது ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானி அவசரநிலையை அறிவித்தார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்" என்றார்.
220 people were on board & with such turbulence Indigo landed safely..
— Trupti Garg (@garg_trupti) May 21, 2025
Hats off to both the pilots 🙌🏻 pic.twitter.com/Sf2QwDZklm
இண்டிகோ தகவல்
அதேபோல இண்டிகோ நிறுவனமும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142 திடீர் ஆலங்கட்டி மழையில் சிக்கியது. இதையடுத்து விமான குழுவினர் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றினர். மேலும் விமானம் ஸ்ரீநகரில் தரையிறங்கிய உடனே பயணிகள் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. விமானம் தேவையான ரிப்பேர் மற்றும் ஆய்வுக்கு பிறகே பயணங்களைத் தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications