எலான் மஸ்க்கின் டெஸ்லா வந்தால் எப்படி சமாளிக்க போறீங்க? ஆனந்த் மகிந்திரா கொடுத்த பதில்தான் ஹைலைட்டே
டெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கும் நிலையில், டெஸ்லா இந்திய கார் சந்தையில் முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது குறித்து நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மகிந்திரா குழுமங்களின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்திய சந்தைகளில் நுழைய கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் வரி அதிகமாக இருப்பதாக கூறி வந்த எலான் மஸ்க், கடந்த ஆண்டு தனது இந்திய பயணத்தை கூட திடீரென ரத்து செய்தார்.

இத்தகைய சூழலில் தான், கடந்த வாரம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்து பேசியிருந்தார். எலான் மஸ்க் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்ற ஒரு சில தினங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதாவது, இந்தியாவில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, வணிகத்தை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 13 பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது.
லிங்க்ட் இன் தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் எண்ட்ரி கொடுக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவன கார்கள் அறிமுகம் ஆகும் போது ஏற்கனவே விற்பனையில் முன்னணியில் உள்ள மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இது குறித்து மகிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மகிந்திராவிடம் நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து இருக்கும் ஆனந்த் மஹிந்திரா கூறியதாவது:- இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட 1991 ஆம் ஆண்டு முதலே இப்படியான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. டாடா, மாருதி, பிற பன்னாட்டு நிறுவனங்களுடன் எப்படி போட்டி போட போகிறீர்கள்? என்று கேட்கப்படுகிறது.
ஆனால், நாங்கள் நீடித்து நிற்கிறோம். முழு ஈடுபாட்டுடன் தீவிரமாக உழைத்தால் இன்னும் நூறாண்டுகள் நீடிக்கலாம் என்ற ரீதியில் பதிலளித்துள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பலரும் ரீப்ளே செய்து வருகிறார்கள். மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை இந்திய கார் உற்பத்தி சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது.
அண்மையில் மகிந்திரா நிறுவனத்தின் எஸ்.யூ வி மாடலான XEV9e புக்கிங் ஓபன் ஆனது. முதல் நாளிலேயே 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்று வாகன சந்தையில் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய சூழலில் தான் டெஸ்லா நிறுவனம் தனது கார்களை இந்திய சந்தைக்குள் கொண்டு வந்தால் முன்னணி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications