பணக்காரர்களின் வினோத ஆசைகள்.. எப்படி நிறைவேற்றப்படுகின்றன தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க
டெல்லி: இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டிருக்கும் பணக்காரர்கள் 191 பேர் இருக்கின்றனர். இவர்களின் ஆசைகள் நம்மை போன்ற சாமானிய மனிதர்களை போன்று இருக்காது. எனவே இந்த ஆசைகளை நிறைவேற்ற சொகுசு சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பணக்காரர்களின் ஆசைகள் என்ன? அது எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
சொந்தமாக ஒரு வீடு, கார், லட்சங்களில் அல்லது சில கோடி பேங்க் பேலன்ஸ் என்பதுதான் நமது அதிகபட்ச ஆசையாக இருக்கும். ஆனால் பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.

உலகின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை தங்கள் வீட்டு விசேஷத்திற்கு அழைத்து வருவது, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மிகவும் பிரசித்திப்பெற்ற பழம்பொருட்களை வாங்க நேரடியாக செல்ல தனி விமானத்தில் செல்வது, பனிமலையின் உச்சியில் பிறந்தநாள் கொண்டாடுவது, விம்பிள்டன் போன்ற புகழ்பெற்ற விளையாட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிப்பது, மிகவும் பிரசித்திப்பெற்ற சமையல் கலைஞரை வீட்டுக்கு அழைந்து வந்து சமைக்க சொல்வது இப்படி பல ஆசைகள் பணக்காரர்களுக்கு இருக்கும்.
இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதுதான் சொகுசு சேவை நிறுவனங்களின் வேலை. இந்தியாவில் இப்படியான நிறுவனங்கள் சமீப காலமாக அதிகமாக வளர தொடங்கியுள்ளது.
உதாரணமாக உலகின் மிகவும் பிரசித்திப்பெற்ற உணவுகளில் 'அல்மாஸ் கேவியர்' எனும் உணவும் ஒன்று. இதன் விலை ரூ.29 லட்சம் வரை இருக்கும். இதனை தயாரித்து சாப்பிடுவது பணக்ககாரர்களின் ஆசைகளில் ஒன்றாக இருக்கலாம். அப்படியான ஆசைகளை இந்த நிறுவனங்கள் நிறைவேற்றும்.
இந்த உணவு, ஈரான் நாட்டை சேர்ந்ததாகும். Beluga sturgeon எனப்படும் ஒரு வகை மீனின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே ஈரானுக்கு சென்று இந்த உணவை வாங்கி சூடு ஆறுவதற்குள் இந்தியாவுக்கு கொண்டு வரும் வேலையை இந்நிறுவனங்கள் செய்யும். மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பிரசித்திப்பெற்ற 7 கோயில்களில் ஒரே நாளில் தரிசனம் மேற்கொள்வதற்கும் இந்நிறுவனம் வழிவகை செய்து கொடுக்கும்.
இப்படியான நிறுவனங்களில் ஒன்றுதான் CribLife. இதன் சிஇஓ விஜயா ஈஸ்ட்வுட் கூறுகையில், "இன்றைய ஆடம்பரம் என்பது சிறந்ததை தேர்ந்தெடுப்பது" என்று கூறியுள்ளார். இவரது நிறுவனம் 15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேவைகள் வழங்குகிறது. குழந்தை பெறுவதற்கான IVF சிகிச்சை முதல் வெளிநாட்டு பயணங்கள் வரை பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
இப்படியான சேவைகளை வழங்கும் மற்றொரு நிறுவனம் Quintessentially India. இந்நிறுவனத்தின் CEO மிஷ்டி போஸ் கூறுகையில், "இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகளுக்கும், உடல் ஆரோகியத்தை மேம்படுத்த தனிப்பட்ட பயணத்திற்கும் அதிக டிமாண்ட் இருக்கிறது. பிறந்தநாளை தீவில் கொண்டாடுதல் அல்லது விம்பிள்டன் VIP பாஸ் போன்றவற்றையும் நாங்கள் வழங்குகிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ரூ.87 கோடிக்கும் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 85,698. எனவே பணக்காரர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களும் தங்கள் சேவையை விரிவுப்படுத்தி வருகின்றன.
ஆனால் மறுபுறம் இந்தியாவில், 108 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று ஐநா கூறியிருக்கிறது. பழங்கள் வாங்குவதற்கும், மருந்துகள் வாங்குவதையும் மக்கள் ஆடம்பர செலவாக கருகின்றனர். இப்படியான மக்கள் இருக்கும் நாட்டில்தான் சொகுசு சேவை நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications