ஈரான் டார்கெட் செய்யும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கம்.. நம்ம இந்தியாவுக்கும் எப்படி எதிரி தெரியுமா?
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல்-அட்ல் என்கிற பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை ஈரான் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அரங்கத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத இயக்கத்தால் இந்தியாவும் கடும் நெருக்கடிகளை சந்தித்திருப்பதாக விவரிக்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
குல்பூஷன் ஜாதவ்.. இந்த பெயரை நாம் மறந்துவிட முடியாது. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி.

குல்பூஷன் ஜாதவ்: ஈரான் அருகே பந்தார் அப்பாஸ்- சப்பார் துறைமுகங்களுக்கு இடையே கார்கோ தொழிலில் ஈடுபட்டிருந்தவர். 2016-ம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் ஒரு பயங்கரவாத இயக்கத்தால் ஈரானில் இருந்து கடத்தப்பட்டு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் இந்தியரான குல்பூஷன் ஜாதவை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.ம் பெருமளவு பணம் பெற்றுக் கொண்டு 'விற்பனை' செய்தது அந்த பயங்கரவாத இயக்கம். குல்பூஷன் ஜாதவை அதிகாரப்பூர்வமாக கைது செய்ததாக அறிவிக்க பாகிஸ்தான், அவரை ஒரு இந்திய ரா உளவாளி என பிரகடனம் செய்து சிறையில் அடைத்தது. குல்பூஷன் ஜாதவ் தற்போது மரண தண்டனை கைதியாக பாகிஸ்தான் சிறையில் வதைப்பட்டு வருகிறார். அவரின் விடுதலைக்காக மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்தும் வருகிறது.
கடத்தி விற்பனை செய்த பயங்கரவாதிகள்: இந்தியரான குல்பூஷன் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திய அந்த பயங்கரவாத அமைப்பின் பெயர்தான் ஜெய்ஷ் அல்-அட்ல் . ஆம் தற்போது ஈரான் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கும் அதே ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாதிகள்தான், குல்பூஷன் ஜாதவை பெரும் தொகை பணத்துக்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு "விற்பனை" செய்த கொடூரர்கள். இந்தியரான குல்பூஷன் ஜாதன் இன்று மரண தண்டனையை எதிர்நோக்கவும் ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத இயக்கமே காரணம் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
ஈரானில் தற்கொலை படை தாக்குதல்கள்: ஈரானிலும் அமெரிக்காவிலும் ஒருசேர பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்யப்பட்ட அமைப்பு ஜெய்ஷ் அல்-அட்ல். ஷன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்த 500 முதல் 600 பேர் இந்த பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனராம். ஈரானில் ஏற்கனவே தாக்குதல்களை நடத்தி இருக்கிறது இந்த பயங்கரவாத அமைப்பு. ஈரான் பாதுகாப்பு படையினரை அதிக அளவு இலக்கு வைத்து தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்திய இயக்கம்தான் ஜெய்ஷ் அல்-அட்ல் . அதனால்தான் ஈரான் இப்போது ஒட்டுமொத்த கோபத்தையும் மொத்தமாக காட்டிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு தரப்பு வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications