ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்
டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சாத்தியாகும் பட்சத்தில் இந்தியா - ஈரான் இடையே மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கும். இதன்மூலம் ஈரானும், நம் நாடு பெரிய அளவில் பயன்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்து வருகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மீதான விலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் போருக்கு நடுவே அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார்.
கச்சா எண்ணெய் மீதான தடை நீக்கம்
அதன்படி ஈரானின் கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அறிவித்தது. ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடை ஒரு மாத காலம் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 140 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும். இருப்பினும் இது கப்பலில் ஏற்றி வைத்துள்ள கச்சா எண்ணெய்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வாங்க திட்டம்
இந்நிலையில் தான் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா மீண்டும் தொடங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா தளர்த்தி உள்ளதால் அதனை பயன்படுத்தி அந்த கச்சா எண்ணெய்களை வாங்க இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.
மத்திய அமைச்சகம் சொல்வது என்ன?
இது தொடர்பாக, தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பிரத்யேக வியூகத்தை வகுத்து வருகிறது. இதுபற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், ''ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு முடிவும் தொழில்நுட்பம்-வணிக ரீதியான சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படும்'' என்றார். இதனால் அமெரிக்கா நீக்கிய தடையை பயன்படுத்தி நம் நாடு கச்சா எண்ணெய் வாங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சவால் என்ன?
அதேவேளையில் பாதுகாப்பாக நிதி பரிமாற்றம் செய்வதற்கான SWIFT அமைப்பின் நிதி தொழில்நுட்பத்தில் ஈரான் இல்லை. SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) என்பது சர்வதேச அளவில் வங்கிகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ளும் பாதுகாப்பான செய்தி பரிமாற்ற நெட்வொர்க்காகும்.
இதில் ஈரான் இல்லை. ஈரானின் பல வங்கிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரானுக்கு பணம் கொடுப்பது சிக்கலாக மாறலாம். இது பெரிய நடைமுறை சிக்கலாக உள்ளது. ஏனென்றால் இந்த ஸ்விப்ட் தான் பணப்பரிமாற்றம் செய்வதற்கான 'உத்தரவை' (Payment Order) ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மிகவும் பாதுகாப்பான குறியீடுகள் மூலம் அனுப்புகிறது.
இது உலகளாவிய நிதிச் சந்தையின் "முதுகெலும்பு". இதன் வழியாக தான் கச்சா எண்ணெய் பணப்பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு பணங்களின் மாற்றம் செய்வது உள்ளிட்டவை நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் அதனை தாண்டி எப்படி ஈரானின் கச்சா எண்ணெயை வாங்கலாம் என்பது பற்றி இந்தியா பரிசீலனை செய்து வருகிறது. அந்த வகையில் சீன மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஈரானின் கச்சா எண்ணெயை பயன்படுத்த தனி கட்டண முறையை இந்தியா உருவாக்க முயற்சிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா - ஈரானுக்கு என்ன லாபம்?
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று கூடுதல் காலஅவகாசம் வழங்கி உள்ளார். அதற்காக 5 நாட்கள் வரை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் தினமும் உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதம் கப்பல்களில் செல்லும். தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் தான் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் அமெரிக்கா தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அதனை பயன்படுத்தி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க நம் நாடு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நம் நாட்டுக்கு பெரிய அளவில் லாபமாக இருக்கும். போக்குவரத்து செலவும் குறைவாக இருக்கும். நேரடியாக ஈரானில் இருந்து எந்த இடையூறும் இன்றி அரபிக்கடல் வழியாக நம் நாட்டுக்கு விரைவாக கச்சா எண்ணெய் வந்துவிடும்.
அதேவேளையில் இந்தியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் அந்த நாட்டுக்கு பணம் கிடைக்கும். இதன்மூலம் ஈரான் தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து சிறிய அளவில் மீள முடியும். அதோடு தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்கும்போது நம் நாடு, அந்த நாட்டுக்கான பெரிய மார்க்கெட்டாக மாறும். இதனால் பெரிய அளவில் ஈரானின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
ஈரானுடன் ஆயில் வர்த்தகம் எவ்வளவு?
மேலும் நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. இன்னும் சொல்லப்போனால் ஈரானின் கச்சா எண்ணெய் வாடிக்கையாளர்களில் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக இருந்தது.
ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் நம் நாட்டில் உள்ள இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வர்த்தக விதிகளுக்கும் சாதகமாக இருக்கும். இதனால் ஈரானிடம் இருந்து இலகு ரகம் மட்டுமின்றி கனரக கச்சா எண்ணெய்களை நம் நாடு இறக்குமதி செய்தது.
2018ல் ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து 2019 மே மாதம் முதல் ஈரானிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. அந்த சமயத்தில் ஈரான் நம் நாட்டின் தேவையில் 11.5 சதவீத கச்சா எண்ணெயை வழங்கி வந்தது.
மேலும் இந்த கச்சா எண்ணெய் வர்த்தக கட்டணம் ரூபாயில் பரிமாற்றம் செய்யப்பட்டது. மொத்த கச்சா எண்ணெயில் 45 சதவீதம் பணமாக ஈரானுக்கு வழங்கப்பட்டது. மீதமுள் 55 சதவீதத்தை பணமாக வாங்காமல் அதற்கு ஏற்ப நம் நாட்டிடம் இருந்து அரிசி, சர்க்கரை, மருந்து உள்ளிட்டவற்றை ஈரான் பெற்று கொண்டது. இது ஈரானுக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது.
2019ல் ஈரான் உடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் தடைப்பட்டதை தொடர்ந்து நம் நாடு ஈராக், சவுதி அரேபியா உள்பட பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை கூடுதலாக இறக்குமதி செய்ய தொடங்கியது. அதன்பிறகு ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்ததால் அந்த நாட்டிடமும் நம் நாடு அதிகளவில் வாங்க தொடங்கியது. இருப்பினும் கூட ஈரானும், நம் நாடும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications