"3 நாள் அவகாசம்".. பிரஷாந்த் கிஷோரை காங்கிரசில் இணைய அழைத்த ராகுல்?.. மிக உயரிய பொறுப்பு ரெடியா!?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் உள்ளதா என்று பிரஷாந்த் கிஷோரிடம் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி கேட்டதாக தகவல்கள் வருகின்றன. உயரிய பொறுப்பு வழங்கப்படும், 3 நாட்களுக்குள் உங்கள் முடிவை சொல்லுங்கள் என்று பிரஷாந்த் கிஷோருக்கு ராகுல் காந்தி அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும், ராகுல், ப்ரியங்கா ஆகியோருடன் டெல்லியில் சந்திப்பு நடத்தினார். நேற்று மாலை நடந்த இந்த சந்திப்புதான் தற்போது தேசிய அரசியலில் மிகப்பெரிய வைரல் டாப்பிக்காக இருக்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலில் திமுக மற்றும் திரிணாமுல் கட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரஷாந்த் கிஷோர் தேர்தலுக்கு பின், அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போதே இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்வாரா என்ற கேள்வி எழுந்தது.

நேற்று
இந்த நிலையில்தான் நேற்று பிகே சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பஞ்சாப் தேர்தல், உத்தர பிரதேச தேர்தல் குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் உண்மையில் இந்த மீட்டிங்கில் அதை பற்றி எல்லாம் பேசவே இல்லை. அதைவிட மிகப்பெரிய விஷயம் ஒன்றை பற்றி பிகேவிடம் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது.

உறுப்பினர்
அதன்படி காங்கிரஸ் கட்சியில் உயரிய பொறுப்பு வழங்கப்படும், எங்கள் கட்சியில் இணைகிறீர்களா என்று பிரஷாந்த் கிஷோருக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வருகின்றன. நேற்று நடந்த இந்த மீட்டிங் முதலாவது மீட்டிங் கிடையாது. இதற்கு முன்பே இவர்கள் ரகசிய சந்திப்புகளை நடத்தி உள்ளனர். நேற்று நடந்தது அதிகாரபூர்வ மீட்டிங் என்று கூறப்படுகிறது.

2024 தேர்தல்
2024 லோக்சபா தேர்தலை குறி வைத்து காங்கிரஸ் இயங்கி வரும் நிலையில் பிகேவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தோடு பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் கே. சி வேணுகோபால். ஹரிஷ் ராவத் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் ஹரிஷ் ராவத் பஞ்சாப்பில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிகே வேலை பார்த்த போது அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்.

சவால்
பொதுவாக பிகே சவால்களை விரும்ப கூடியவர். மேற்கு வங்கத்தில் பாஜக, அமித் ஷாவின் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக மம்தாவை வெற்றிபெற வைத்தார். 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுகவிற்காக தமிழ்நாடு தீவிரமாக பணிகளை செய்தார். இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய சவாலுக்கு அவர் ரெடியாகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்குள் இவருக்கு மிக உயரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இதை பற்றி 3 நாட்களுக்குள் பதில் அளிக்க பிகேவிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிகே நேற்று சோனியா குடும்பத்தோட நட்பாக பேசியதாகவும், மொத்த உரையாடலும் சுமுகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் காங்கிரசில் இணைய பிகே சில கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

என்ன
அதன்படி காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய விஷயங்களிலும் என்னுடைய கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நிதி விவகாரங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும். கட்சி ரீதியாக அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். முக்கிய முடிவுகளை இணைந்து எடுக்க வேண்டும் என்று பிகே குறிப்பிட்டதாக தெரிகிறது.

கோரிக்கை
அதேபோல் காங்கிரசில் கபில் சிபல் உட்பட ஜி 23 தலைவர்கள் எனப்படும் 23 தலைவர்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அவர்களின் அதிருப்தி குறித்தும், பிகேவிற்கு உயர் பொறுப்பு வழங்கப்பட்டால் அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பிகே இன்னும் காங்கிரசில் இணைவது அல்லது காங்கிரசுக்கு ஆலோசகராகவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம்
கடந்த உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக ஆலோசனை பணி மேற்கொண்ட பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையை, ராகுலை, காங்கிரசின் முடிவுகளை விமர்சனம் செய்து இருக்கிறார். அதே சமயம் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கூட்டணியும் அவசியம், காங்கிரஸ் இன்றி எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியம் இல்லை என்று பிகே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications