பகலா? இரவா? பாஜக இப்படி பேசுது.. அமித்ஷாவுக்கு ஸ்வீட் தான் கொடுக்கனும்.. கலாய்த்த காங்கிரஸ்.. ஏன்
டெல்லி: நாட்டில் முதல் பிரதமர் நேருவை அமித்ஷா மீண்டும் மீண்டும் பாரட்டி பேசுவதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் இது பகலா அல்லது இரவா என நினைக்கத் தோன்றுகிறது என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
டெல்லியில் அதிகாரிகள் நியமனங்கள் தொடர்பான மசோதாவை மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அமித்ஷா தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் இதனால், மசோதா மீதான விவாதத்தின் போது மக்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும் மையப்புள்ளியாக மாறினார்.

குறிப்பாக அமித்ஷாவே ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிட்டார். அமித்ஷா பேசும் போது, கடந்த 2015ஆம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வரும் வரை டெல்லி பல்வேறு அரசுகளின் கீழ் இருந்துள்ளது. அப்போதெல்லாம் டெல்லி நிர்வாகம் சுமுகமாகவே செயல்பட்டது. ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களும் கூட டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரும் யோசனைக்கு எதிராகவே இருந்தனர் என்பதையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்" என்று அவர் தெரிவித்தார்.
நேருவை பாஜக அரசு எப்போதுமே கடுமையாக விமர்சிப்பதுண்டு. முந்தைய அரசின் குறைபாடுகள், நிர்வாக சீர்கேடுகள் என பாஜக விமர்சிக்கும் போதெல்லாம் நேருவையும் இழுத்து விடுவதுண்டு. நாடு சந்திக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நேருவின் கொள்கைகளே காரணம் என்று பாஜக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் இன்று அமித்ஷா பேசுகையில், நேருவின் அறிக்கைகளை குறிப்பிட்டதும் மக்களவையில் காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சிரித்துக் கொண்டே எழுந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேருவையும் காங்கிரஸ் கட்சியையும் பாராட்டி பேசுவதை கேட்கும் போது எனது காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. இன்று அவைக்கு வந்ததுமே நல்லதாகவே உணர முடிந்தது. அமித்ஷா மீண்டும் மீண்டும் நேருவையும் காங்கிரஸ் கட்சியையும் பாராட்டி பேசினார். இது பகலா அல்லது இரவா? நான் எதை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றே எனக்கு நினைக்க தோன்றியது. அமித்ஷாவுக்கு இனிப்பை ஊட்ட வேண்டும் என்றுதான் நினைத்தேன்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமித்ஷா, நான் நேருவை பாராட்டவில்லை என்றும், நேரு கூறியதை இங்கு சுட்டிக்காட்ட மட்டுமே செய்கிறேன். இதை நீங்கள் பாராட்டுவதாக கருதினால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, " உங்களுக்கு தேவை என்றால் நேருவின் ஆதரவை எடுத்துக்கொள்கிறீர்கள். அனைத்திலும் இதை நீங்கள் செய்து இருந்தால் மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் இப்படி ஒரு நிகழ்வுகள் நடந்து இருக்காது" ஏன்றார்.












Click it and Unblock the Notifications