மோடி, மோகன் பகவத் மட்டுமில்ல.. மஹ்மூதுக்கும் இந்தியா சொந்தம்! பழமையான மதம் இஸ்லாம் - மஹ்மூத் மதனி
உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் பழமையானது இஸ்லாம் என ஜம்மியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதனி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியா என்பது நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்திற்கும் எந்த அளவுக்கு சொந்தமானதோ அதே அளவுக்கும் இந்த நாடு மஸ்மூதுக்கும் சொந்தமானது என்று ஜம்மியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான மஹ்மூத் மதனி தெரிவித்து இருக்கிறார். உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் பழமையானது இஸ்லாம் எனவும் அவர் கூறி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியாவில் உள்ள பழமையான இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜம்மு உலமா இ ஹிந்த் அமைப்பின் 34 வது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அனைத்து மதங்களுக்கு இடையே சமத்துவம், சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

பழமையான மதம்
இதில் கலந்துகொண்ட அதன் தலைவரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் முன்னாள் எம்பியுமான மஹ்மூத் மதனி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகிலேயே மிகவும் பழமையான மதம் இஸ்லாம் என்றார். "இந்தியா என்பது நமது நாடு. பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கும் இந்த நாடு எந்த அளவுக்கு சொந்தமானதோ, அதே அளவிற்கு மஹ்மூதுவுக்கும் சொந்தமானதாகும்.

மோடியும் மஹ்மூதும் ஒன்று
ஒரு அங்குலம் கூட மஹ்மூத் அவர்களைவிட முன்னால் இல்லை. அதேபோல் அவர்கள் மஹ்மூத்தை விட ஒரு அங்குலமும் பின்னால் இல்லை. முஸ்லீம்களின் முதல் தாயகம்தான் இந்த நிலம். வெளியில் இருந்து வந்த மதம் இஸ்லாம் என்று கூறுவது முழுவதும் தவறானது. அது அடிப்படை இல்லாதது. இஸ்லாம் என்பது அனைத்து மதங்களை விடவும் பழமையான மதமாகும்.

முஸ்லிம்களுக்கு சிறந்த நாடு
இந்தி முஸ்லிம்களுக்கு சிறந்த நாடு இந்தியா. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நாங்கள் உள்ளோம். எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. மோசடி செய்தோ, பேராசைக்காகவோ, கட்டாயத்தின் பேரிலோ மதமாற்றம் நடைபெறுவதை நாங்களும் எதிர்க்கிறோம்.

தொழுகைக்கு தடை
இஸ்லாமிய சமுதாயத்தை பல நிறுவனங்கள் குறிவைப்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. தொழுகைக்கு தடை விதிப்பது, அவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கை, புல்டோசர்களை கொண்டு முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது போன்ற பல உதாரணங்கள் உள்ளன." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

முக்கிய தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு அதிகரித்து வருவதாகவும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுபவர்களை தண்டிப்பதற்கு தனி சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும், நாட்டில் தொடர்ந்து வரும் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜம்மியத் உலமா இ ஹிந்த்
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஜம்மியத் உலமா இ ஹிந்த் அமைப்பு இஸ்லாமியர்களின் சமூக உரிமைகள், மத உரிமைகள், கலாச்சார உரிமைகள், கல்வி உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பாபர் மசூதி இடிப்பு, குடியுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம், கும்பல் படுகொலைகள், மாட்டிறைச்சி தடை உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு எதிராக அந்த அமைப்பு எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications