தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம்.. ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம்
டெல்லி: நாட்டின் 12 மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிதீவிர செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது, நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாடு குறித்து பாஜக எம்பி வினய் சஹாஸ்ரபுத்தே கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி, ''நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு இருந்தது. இதில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் ஈராக், ஐஎஸ் சிரியா, ஐஎஸ்கேபி ஆகியவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்திற்கு விரோதமான சட்டத்தின் கீழ் இவற்றின் நடவடிக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இணையதளங்கள் வாயிலாக இந்தியாவில் அவர்களது கொள்கைகளை ஐஎஸ் தீவிரவாதிகள் பரப்பியுள்ளனர். சைபர் ஏஜென்சிகள் இதுகுறித்து கவனமாக கண்காணித்து வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னிந்திய மாநிலங்களில் தனிப்பட்ட நபர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்தும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications