பிபிசியில் நடப்பது வருமான வரி சோதனையில்லை.. வருமானவரி ஆய்வாம் ..வித்தியாசம் என்ன தெரியுமா?
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடக்கவில்லை. வருமான வரி ஆய்வு மட்டுமே நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்பது வெளியாகி உள்ளது.
டெல்லி: 2002 குஜராத் மதகலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் தடைகளை மீறி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அது வருமான வரி சோதனை இல்லை என்பதும், வருமான வரி ஆய்வு (சர்வே) என்பதும் தெரியவந்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழப்பத்தை போக்கி வருமான வரி சோதனை, வருமான வரி சர்வே ஆகியவற்றுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை உங்களுக்கு எளிமையாக கூறுகிறோம்.
கடந்த 2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் சாதுக்கள், இந்து யாத்ரீகர்கள் இறந்தனர். இதையடுத்து பெரிய அளவில் மதகலவரம் வெடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் நரேந்திர மோடி உள்பட பல அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நரேந்திர மோடியை விடுதலை செய்தது. இந்நிலையில் தான் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 பகுதிகளாக ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் பலரும் தடையை மீறி ஒளிபரப்பு செய்தனர். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.

வருமான வரி ஆய்வு
இந்நிலையில் தான் இன்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இதையடுத்து பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது பிபிசி அலுவலகத்தில் நடப்பது வருமான வரி சோதனை இல்லை எனவும், அது வருமான வரி ஆய்வு என்பதும் தெரியவந்துள்ளது.

குழம்பிய மக்கள்
பொதுவாக வருமான வரி அதிகாரிகள் என்றாலே சோதனை தான் என நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கும் சூழலில் இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வருமான வரி சோதனையில் என்ன நடக்கும்? வருமான வரி ஆய்வில் என்ன நடக்கும்? என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. இதனை நாம் எளிமையாக அறிந்து கொள்ளலாம். அது எப்படி? என்பது வருமாறு:

வருமான வரி ஆய்வு என்றால் என்ன?
அதாவது வருமான வரி சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கி வருகின்றன. இன்று பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வருமான வரி சட்டம் 1961ன் 133 ஏ பிரிவின் கீழ் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டப்பிரிவின்படி எந்தவொரு வணிகம், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நுழைந்து அவர்களின் கணக்கு உள்ளிட்ட பிற ஆவணங்களை சரிபார்க்க முடியும். அதாவது தகவல்கள் ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளதா? இல்லாவிட்டால் மறைக்கப்பட்ட தகவல்களை கண்டுபிடிக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இந்த பிரிவு அதிகாரம் வழங்குகிறது. அந்த வகையில் இன்று பிபிசி நிறுவனங்களில் வருமான வரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யலாமா?
இந்த ஆய்வின்போது ஏதேனும் ரொக்கப்பணம், பிற மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால் அதுபற்றிய முழுபட்டியலை அதிகாரிகள் தயார் செய்யலாம். மேலும், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யலாம். இருப்பினும் விடுமுறை நாட்கள் உள்பட 15 நாட்களுக்கு மேல் அதனை அதிகாரிகள் வைத்திருக்க முடியாது. மீறி வைத்திருக்க வேண்டும் என்றால் வருமான வரி தலைமை ஆணையர் அல்லது முதன்மை இயக்கனர் ஜெனரல், இயக்குனர் ஜெனரல், முதன்மை ஆணையர், ஆணையரின் முன்அனுமதி கட்டாயம் வேண்டும்.

வருமான வரி சோதனை என்பது என்ன?
மாறாக வருமான வரி சோதனை (வருமான வரி ரெய்டு) என்பது வருமான வரி சட்டத்தின் 132வது பிரிவின் கீழ் வரும். இந்த சட்டப்பிரிவை தான் வருமான வரி துறையினர் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த சட்டப்பிரிவு என்பது வருமான வரித்துறையினர் சோதனை நடத்த அதிகாரம் வழங்கும். அதாவது குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட நிறுவனம் வருமானத்தை மறைத்து பணம், நகைகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என நம்பும்போது அதனை கண்டுபிடிக்கும் வகையில் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் வழங்குகிறது.

லாக்கரை திறக்க அதிகாரம்
மேலும் வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்யலாம். லாக்கர், பீரோ உள்ளிட்ட எந்த இடத்தை வேண்டுமானாலும் திறந்து சோதனை செய்யலாம். வங்கி கணக்கு புத்தகங்கள் உள்பட பிற ஆவணங்களின் சாராம்சம் குறித்து கேள்விகள் எழுப்பலாம். அதோடு வருமான வரி சோதனை நடத்த பிறகு குறிப்பிட்ட நபரை விசாரணைக்கு அழைக்க சம்மன் (நோட்டீஸ்) வழங்கி நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டப்பிரிவு அதிகாரம் வழங்குகிறது.

ரெய்டு எனும் வார்த்தையில்லை
மேலும் வருமான வரி சோதனைக்கான இந்த 132வது சட்டப்பிரிவில் எங்கும் ரெய்டு (Raid) என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. மாறாக சோதனை(Search) என்ற வார்த்தைகள் தான் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அனைவரும் வாய்மொழியாக ரெய்டு.. ரெய்டு என கூறுவதால் வருமான வரி ரெய்டு என்பது பழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் வருமான வரி ரெய்டு என கூறுவதை விட வருமான வரி சோதனை என கூறுவது தான் பொருத்தமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications