"விதிமீறல்".. ராகுல் காந்தியின் கணக்கை லாக் செய்துவிட்டோம்.. டெல்லி ஹைகோர்ட்டில் ட்விட்டர் தகவல்
டெல்லி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட டெல்லி சிறுமியின் குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் கணக்கு லாக் செய்யப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்திய தலைநகரில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அரவணைத்தபடி ராகுல் காந்தி அவருக்கு ஆறுதல் அளித்தார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாக பரவியது. ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. மாக்ராந் சுரேஷ் என்பவர் ராகுல் காந்தி மீதும் ட்விட்டர் நிறுவனம் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டும் என்று கூறி உச்ச டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்ட பிரிவுகளான போக்ஸோ சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் கீழ் எப்ஐஆர் பதிய வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.
கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் அடையாளத்தை வெளியிட்ட காரணத்தால் எப்ஐஆர் பதிய வேண்டும் என்று வழக்கு தொடுத்து இருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவனம் மீதும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் டிஎன் பாட்டில் மற்றும் ஜோதி சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இன்று பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், ராகுல் காந்தியின் அந்த குறிப்பிட்ட வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதோடு ராகுல் காந்தியின் கணக்கும் லாக் செய்யப்பட்டுவிட்டது என்று ட்விட்டர் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சஜ்ஜன் பூவையா தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், நீங்கள் வேகமாக ஆக்சன் எடுத்துள்ளீர்கள், சிறப்பு என்று கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, ட்விட்டர் நிறுவனம் தனது செயல்பாட்டை அதிகாரபூர்வமாக பிரமான பாத்திரம் தாக்கல் செய்து, தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் , நாங்கள் அந்த ட்விட்டை நீக்கி அதோடு அவரின் கணக்கை முடக்கிவிட்டோம். இந்த வழக்கில் எங்களை எதிர் தரப்பாக சேர்த்து இருக்கவே கூடாது என்று வாதம் வைத்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications