உக்கிரமான இஸ்ரேல்.. உடனே இதை செய்யுங்க.. ஹமாஸ்க்கு இந்தியா முக்கிய அறிவுரை.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்
டெல்லி: காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை மீண்டும் நேற்று தொடங்கியது. குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 400க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மீண்டும் போரை இஸ்ரேல் தொடங்கி உள்ள நிலையில் ஹமாஸ் பிடித்து வைத்து இருக்கும் பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நம் நாடு தெரிவித்துள்ளது.
கடந்த 15 மாதமாக காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போர் கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கைதிகள் மற்றும் பணயக்கைதிகளை பரிமாறி கொள்வதன் அடிப்படையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது காசா மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. நேற்று காசாவின் 12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதில் குடியிருப்புகள் சேதமாகின. முக்கியமாக காசாவில் நடக்கும் ஹமாஸ் அரசின் தலைவர் இசாம் அல் தல்லிஸ், உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகத்தின் தலைவர் மகுத் அபு வாட்ஃபா, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரியாகன டைரக்டர் ஜெனரல் பஜாத் அபு சுல்தான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இசாம் அல் தல்லிஸ் என்பவர் காசாவுக்கான பிரதமர் என்ற வகையில் அதிகாரம் படைத்த நபர் ஆவார்.
மேலும் குழந்தைகள் பெண்கள் என்று 400க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதோடு 500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் படுகாயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை என்பது கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹமாஸ் கடும் கோபமடைந்துள்ளது. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை உக்கிரமாக தொடர முடிவு செய்துள்ளது.
இதனால் இஸ்ரேல் - காசா இடையேயான போர் என்பது மீண்டும் தீவிரமாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் சார்பில் பணயக்கைதிகளை விடுவிக்காமல் இருப்பது தான். பலமுறை இஸ்ரேல் பணயக்கைதிகளை கேட்டும் ஹமாஸ் விடுவிக்க மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் ஆக்ரோஷமான தாக்குதலை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் காசாவில் நேற்று நடந்த இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் தொடர்பாக நம் நாடு பெரும் கவலை தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காசாவின் தற்போதைய நிலையை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்த சூழலில் அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது முக்கியம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
அதாவது போர் நிறுத்தத்தை முடித்து கொண்டு இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. அதோடு காசாவில் தவிக்கும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை கிடைக்கவிடாமல் தடுத்துள்ளது. இதனால் ஏராளமான குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து வயதினரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இதன்மூலம் தாக்குதல் நிறுத்தப்படலாம். அதோடு காசாவில் தவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் என்பது உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தான் நம் நாட்டின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications