ரூ200 கோடி மோசடி: சுகேஷ் சந்திராவின் கூட்டாளி நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்!
டெல்லி: ரூ200 கோடி மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திராவின் கூட்டாளியான நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரா, தமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தார். தமிழகத்தில் டிடிவி தினகரன், அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய போது அவரது அணிக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று தருவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பதும் புகார்.

மேலும் சிறையில் இருந்தபடியே தொழிலதிபர்கள் பலருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி ரூ200 கோடி மோசடியில் ஈடுபட்டார் சுகேஷ் சந்திரா என்பதும் வழக்கு. இவ்வழக்கில் சுகேஷ் சந்திரா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரா மீதான ரூ200 கோடி மோசடி வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. நடிகைகளை சுகேஷ் சந்திரா வளைத்தது எப்படி என்கிற மன்மத லீலைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இவ்வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ரூ200 கோடி மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலினுக்கு சொகுசு கார், பரிசு பொருட்களை அள்ளி வீசியிருக்கிறார் சுகேஷ் சந்திரா என்கிற விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நடிகை ஜாக்குலின் ஆஜராகி இருந்தார். அவரிடம் பலமணிநேரம் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த விசாரணையின் போது, சென்னையை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் என சுகேஷ் சந்திரா, ஜாக்குலினிடம் அறிமுகம் செய்திருக்கிறார். அத்துடன் சன் டிவி குழுமத்தின் உரிமையாள எனவும் கூறியிருந்தார் சுகேஷ் என ஜாக்குலின் வாக்குமூலம் கொடுத்தார். இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் ஆஜரானார். அவருக்கு ரூ50,000 பிணையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications