லோக்சபா தேர்தல்.. மமதா இல்லாத இந்தியா கூட்டணியா? வாய்ப்பில்லை ராஜா.. பதறிய காங்கிரஸ் நிர்வாகிகள்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "மமதா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது" என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இது மிக முக்கியமான தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலங்கள் தற்போது கை நழுவி இருக்கிறது. மூத்த தலைவர்கள் சிலர் வெளியேறி உள்ளனர்.

இதனால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. 421 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த முறை எப்படியாவது பாஜகவை தோற்கடிப்பது என தீவிர முயற்சியுடன் களம் இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்தியா கூட்டணி.
திரிணாமுல் காங்கிரஸையும், ஆம் ஆத்மியையும் பாஜகவின் 'பி' டீம் என்று சொல்லி வந்த காங்கிரஸ், தற்போது அந்த கட்சிகளையும் இணைந்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளர் குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இது ஒருபுறம் இருக்க தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார் மமதா பானர்ஜி. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் நழுவலை போல, மேற்குவங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பு கதவு அடைக்கப்பட்டு விடுமோ என மமதாவின் அறிவிப்பை கண்டு காங்கிரஸ் பதறியுள்ளது.
மேற்கு வங்க அரசியலை பொறுத்த அளவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மொத்தம் இருந்த 42 தொகுதியில் திரிணாமுல் 22 தொகுதிகளையும், பாஜக 18 தொகுதிகளையும், காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனவே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 2 இடங்களை ஒதுக்குவதாக மமதா கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்வினையாற்றியிருந்தது.
இப்படி இருக்கையில்தான் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். ஆனால் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் என மமதா அறிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "மமதா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது" என்று கூறியுள்ளார்.
அதாவது, "நாங்கள் ஒரு நீண்ட பயணத்தில் இருக்கிறோம். இடையில் வரும் வேகத்தடை அல்லது சிவப்பு டிராபிக் விளக்கை போல சில சம்பவங்கள் நடக்கலாம். எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடும். நாங்கள் பாஜகவை தோற்கடிக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். இதற்காக நாங்கள் எதையும் செய்ய தயார் என மமதா அறிவித்திருந்தார். எனவே திரிணாமுல் காங்கிரஸ் இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்து கூட பார்க்க முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications