ராகுலின் யாத்திரையை, மோடியின், மன் கீ பாத் மாதிரியா நினைத்தீர்கள்? ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் ஜோடோ யாத்திரை முழுக்க முழுக்க மக்களுக்கானது என்றும், பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் மன் கீ பாத் நிகழ்ச்சியை போல கிடையாது எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான ஒரே தேசியக் கட்சி எனக் கூறப்படும் காங்கிரஸ் கட்சியின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. நிரந்தரத் தலைமை கூட இல்லாமல் அக்கட்சி தள்ளாடி வருகிறது.
இதுபோன்ற இக்கட்டான சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்களும் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அண்மையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியதை அடுத்து, மக்கள் செல்வாக்குமிக்க பல முக்கிய நிர்வாகிகளும் காங்கிரஸில் இருந்து விலகி வருகின்றனர்.

ஓரங்கட்டப்படும் காங்கிரஸ்
இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவை எதிர்க்கும் வலிமையை காங்கிரஸ் இழந்துவிட்டதாகவே பரவலாக கருத்து எழுந்துள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்டிவிட்டு பல மாநிலக் கட்சிகள் ஒன்றையொன்று சந்தித்து தேர்தல் வியூகம் வகுப்பதையும் தற்போது பார்க்க முடிகிறது.

மீண்டும் களத்தில் ராகுல் காந்தி
இதுபோன்ற சூழலில், காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்கும் வகையிலும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டுவதற்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை அறிவித்துள்ளார். அதன்படி, கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள போகிறார். இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 150 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். பிறகு நாளை கன்னியாகுமரி செல்லும் ராகுல் காந்தி அங்கிருந்து தனது யாத்திரையை தொடங்குவார். இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இந்த ஜோடோ யாத்திரை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'மக்களுக்கான யாத்திரை'
இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவை துண்டு துண்டாக பிளவுப்படுத்தி வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மாநிலக் கட்சிகளின் அதிகாரங்களை பறித்து அரசியல் ரீதியாகவும் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. இந்த மோசமான சூழலில் இருந்து நாட்டை காப்பாற்றவும், மக்களை ஒற்றுமைப்படுத்தவுமே ராகுல் காந்தி இந்த ஜோடோ யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியின் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க மக்களுக்கான யாத்திரை ஆகும்.

'மன் கீ பாத் அல்ல'
கடைக்கோடி இந்தியனின் கோரிக்கையையும், வேண்டுகோளையும் மத்திய அரசின் செவிகளுக்கு கொண்டு செல்வதற்கான யாத்திரை. மக்களை ஜாதி, மத ரீதியாக பிரிக்கும் ஆட்சியாளர்களின் முகமூடியை கிழிக்கும் யாத்திரை ஆகும். இந்த யாத்திரையை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் நடத்தும் மன் கீ பாத் நிகழ்ச்சியை போல இந்த யாத்திரை இருக்காது. மன் கீ பாத் நிகழ்ச்சி மக்களுக்கானது அல்ல. அது பிரதமர் நரேந்திர மோடிக்கானது. அங்கு வெற்று போதனைகள் மட்டும் வழங்கப்படும். ஆனால் ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் மக்களின் குறைகளும், அவர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications