ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி..விஜயபாஸ்கர், ரகுபதி சொன்னதை கவனிச்சீங்களா
டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டை காக்க திமுக அரசு வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் சிறப்பாக தீர்ப்பளித்தனர். இது மு.க ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக போட்டிகள் நடைபெறுகிறது.

கடநத 2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால் அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தப்பட்ட தடை விதிக் கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின் கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தை பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு முதலே மாநிலம் முழுவதும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அந்த போட்டிகள் விமரிசையாக கடந்த ஆண்டு நடைபெற்றது. அதேபோல், நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கோவை, காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட தமிழர் விரோத அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
இந்த தீர்ப்பினை தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் காளை வளர்ப்பாளர்களும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிக்கு அனுப்பி வரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டம் பிரதமருக்கு பேசி உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது. இது மக்களுக்கு வெற்றி, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்களுக்கு வெற்றி. ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்திய அளவில் உள்ள மிக முக்கியமான மாநில அரசுகள் இந்த தீர்ப்பு கிடைக்க போராடியுள்ளன. எல்லா மாநில அரசுகளும் போராடின. ஜல்லிக்கட்டுக்காக கடும் குளிரில் நாங்கள் போராடினோம் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஐந்து பேர் ஒரே கருத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டை காக்க திமுக அரசு வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் சிறப்பாக தீர்ப்பளித்தனர். இது மு.க ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி பாதுகாப்பு நடவடிக்கைகளின் படிதான் ஜல்லிக்கட்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தமிழக மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்களும் தெரிவித்ததாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.












Click it and Unblock the Notifications